தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வசமுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு-செலவுத்திட்டம் இன்று அக்கட்சியாலேயே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இன்று 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்ட போது எதிராக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜவரும் ஆதரவாக அதே கட்சியின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட இருவரும் வாக்களித்திருந்தனர்.
எதிர்கட்சியான ஈபிடிபியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருந்தனர்.
கடந்த ஆண்டிலும் இதே போன்று வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்முறையும் அது தோற்கடிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் கடந்த வாரம் இடம்பெற ஏற்பாடாகியிருந்த வரவு-செலவுத்திட்டம் விவாதக்கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அது இன்று தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்து வரும் இருவாரங்களின் பின்னராக மீண்டுமொரு முறை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அவ்வாக்கெடுப்பிலும் தோல்வியுற்றால் தற்போதைய தலைவர் அனந்தராஜ் வகித்துவரும் பதவியினை இழந்துபோவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு போதிய நிதி ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் ஏதுமற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தாம் அக்கறை கொண்டிருக்கவில்லையென ஈபிடிபி உறுப்பினர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூட்டமைப்பு வசமுள்ள வலி.கிழக்கு பிரதேச சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபைகளினது வரவு-செலவுத்திட்டங்கள் கட்சி சார்ந்த உறுப்பினர்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 16 பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதேச சபைகளின் வரவு செலவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கம் தன்வசம் மாற்றலாம் என்ற தகவல்களும் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் கட்டுப்பாட்டில் நகர அபிவிருத்தி அதிகார சபை கொண்டு வரப்பட்டது போன்று உள்ளுராட்சி அதிகாரங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்வு கூறல்கள் வெளிவந்துள்ளன.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment