வட, கிழக்கில் தனியான கணக்கெடுப்பை நடத்த கூட்டமைப்பு தீர்மானம்

மோதலின்போது உயிர் மற்றும் பொருள் இழப்புகளை கணக்கிடுவதற்கான அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு மாற்றாக வடக்கிலும் கிழக்கிலும் தனியான கணக்கெடுப்பை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு திட்டமிடுகின்றது. தனது கட்சியினர் அரசாங்கத்தின் கணக்கெடுப்பை நம்பகமானதென அங்கீகரிக்கவில்லையென இரா.சம்பந்தன் கூறினார். 

 அந்த வகையில் அரசாங்கம் எவரையும் தவறாக வழிநடத்துவதை தடுப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அவர் கூறினார். அரசாங்கம், ஜெனீவாவில் சில பிரச்சினைகளை தாண்டுவதற்காக இதை செய்யக்கூடும்.

 ஆனால் எமக்கு இது எமது மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பானதாகும் என அவர் கூறினார். தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதனால் உண்மையை நிலைநிறுத்த தனது கட்சி விரும்புகின்றதென அவர் கூறினார். 

 ஆயினும் இதை எவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற விவரங்களை வெளியிடுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

வட­மா­கா­ணத்தின் விசேட தேவை­களைப் பூர்த்திசெய்யும் வகையில் தனி­யான சுகா­தாரத்திட்டம் தயா­ரா­கின்­றது. சத்­தி­ய­லிங்கம்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் சுகாதாரத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ள போதிலும் ,
போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாணத்தின் விசேட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகத் தனியான சுகாதாரத் திட்டம் ஒன்று தாயராகிவருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் .

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்டக் கிளையினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பதிலுரையாற்றியபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் .

தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்தக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டார் . பிரதம விருந்தினராக கட்சியின் தலைவர் ஆர் . சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்த போதிலும் வேலைப்பளு காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார் .

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் , தமிழரசுக் கட்சியின் யாழ் . மாவட்டத் தலைவரும் கட்சியின் பொருளாளருமாகிய கனகசபாபதி , கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாண சபையின் தவிசாளருமாகிய சி.வி.கே. சிவஞானம் , வன்னி மாவட்டச் செயலாளர் சந்திரன் வாமதேவன் , சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா . சேனாதிராஜா , முஸ்லிம் சமூகப் பிரதிநிதியாக ஆசிரியர் அப்துல் சமது , கட்சியின் வன்னி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் , இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் , மற்றும் நெடுங்கேணி , செட்டிக்குளம் பிரதேச கிளைகளின் முக்கியஸ்தர்கள் , அங்கத்தவர்கள் , ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமாகிய இராசநாயகம் வவுனியா கிளையின் சார்பில் வாழ்த்துமடல் வாசித்தளித்தார் . கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் .

தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா , கட்சியின் பொருளாளரும் , யாழ் . மாவட்டத் தலைவருமாகிய கனகசபாபதி , வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் , சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா . சேனாதிராஜா , ஆசிரியரும் முஸ்லிம் பிரமுகருமாகிய அப்துல் சமது , திருமதி ஐயம்பிள்ளை , ஓய்வுபெற்ற கிராமசேவையாளரும் தொழிற்சங்கத் தலைவருமாகிய தேவராஜா , கட்சியின் வன்னிமாவட்ட இளைஞர் அணி தலைவர் உட்பட பலரும் இங்கு உரையாற்றினார்கள் .

வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :

இலங்கை அரசாங்கத்தினால் நாட்டின் சுகாதாரத் தேவைகள் குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது . போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண மக்களுடைய பல தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்தத் திட்டத்தில் அம்சங்கள் இல்லை . போரினால் பல வழிகளலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக அவர்களின் தேவை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது . தேவைகள் என்ன என்பதை அறிந்தால்தான் அவற்றை நிவர்த்திசெய்வதற்குரிய திட்டங்களை முன்னெடுக்க முடியும் . அந்த வகையில் வடமாகாண முதலமைச்சரின் ஆலோசனைக்கமைய வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களினதும் தேவைகளை மதிப்பீடு செய்யும் பணிகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் . அதேநேரம் வடமாகாணத்திற்கான சுகாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதில் 20 நிபுணர்கள் என்னுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றார்கள் . இந்தத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி எமது கைகளில் வந்துவிடும் . அதன் பின்னர் , நீண்டகால அடிப்படையில் வடமாகாணத்தின் சுகாதாரத் தேவைகளை கிடைக்கின்ற வளங்கள் , நிதி வசதிகள் மற்றும் புலம் பெயர் மக்களின் உதவிகள் என்பவற்றைப் பயன்படுத்தி பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம் .

போரினால் பாதிக்கப்பட்டு பலர் அவயவங்களை இழந்துள்ளார்கள் . இவர்களின் எண்ணிக்கை பெரிது . ஆனால் உண்மையில் எத்தனைபேர் அவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தெரியாமலிருக்கின்றது . இந்த விபரங்களைத் திரட்டுவதற்கும் , அதன் அடிப்படையில் அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் . போரினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு பலர் இன்று சக்கர நாற்காலிகளில் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கின்றார்கள் . இவர்களில் பலருக்கு அடிப்படை வசதிகள் கிடையாது . இதனால் படுக்கைப்புண் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் உண்டு . இவர்களுடைய நன்மையைக் கருத்திற்கொண்டு வவுனியா , பம்பைமடு வைத்தியசாலையில் இவர்களை அரச செலவில் வைத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றோம் . விரைவில் அந்தப் பணிகள் முடிவடைந்துவிடும் . இதன் மூலம் வசதியற்ற தேவைகள் மிகுந்தவர்களை அங்கு வைத்துப் பராமரிக்க நாங்கள் எண்ணியுள்ளோம் .

இதேபோன்று யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களை வைத்துப் பராமரிப்பதற்கான நிலையங்களை அமைக்கவும் எண்ணியுள்ளோம் . மாகாண சபையில் உள்ள அதிகாரங்கள் , வளங்களைப் பயன்படுத்தி தேவைகள் மிகுந்த எமது மக்களுக்குப் பல சேவைகளை ஆற்றமுடியும் என்பது எனது நம்பிக்கை . முமாகாண சபைக்குப் போதிய அதிகாரங்கள் இருக்கின்றனவா ? இல்லையா என்ற பிரச்சினை ஒருபக்கம் இருக்க , எமக்குள்ள வளங்கள் , பலம் என்பவற்றைப் பயன்படுத்தி எம்மால் செய்யக் கூடிய பணிகளை முன்னெடுப்போம் . வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நாற்பதாயிரம் வாக்குகளை மக்கள் அளித்துள்ளார்கள் . அதில் இருபதாயிரம் வாக்குகளை எனக்களித்து என்னைத் தெரிவுசெய்து இந்தக் கௌரவமும் , பாராட்டுக்களும் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கே சேரும் . இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது . அதேநேரம் இளைஞர்களும் பெரியவர்களும் , தாய்மாரும் எனக்காகத் தேர்தல் காலத்தில் பாடுபட்டிருக்கின்றார்கள் . அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்களோ , அதைவிட பலமடங்கு பாடுபட்டு , போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்காக நான் சேவையாற்றுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

பல இணையத்தளங்கள் எங்களை விமர்சித்திருக்கின்றன . எனது மனைவியைப் பரீட்சை ஒன்றிற்காகக் கண்டிக்கு அழைத்துச் சென்றேன் . மறுநாளே அமைச்சர் உல்லாசப் பயணமாக கண்டிக்குச் சென்றுள்ளார் என்று இணையத்தளத்தில் செய்தி வருகின்றது . எமது சமூகத்தில் திறமைசாலிகள் இருக்கின்றார்கள் . அழகான கேலிச்சித்திரங்கள் , அழகான எழுத்துக்களில் விமர்சனங்கள் என்று அவர்கள் வெளியிடுகின்றார்கள் .

சிறந்த புலனாய்வுத் திறன்வாய்ந்த பலர் எம்மிடையே இருக்கின்றார்கள் . பலர் எங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது . அவர்களின் விமர்சனங்களை நான் வரவேற்கின்றேன் . சிறந்த அமைச்சராக , சிறந்த சேவையாற்றக் கூடிய வகையில் என்னை மாற்றிக்கொள்வதற்கு விமர்சனங்கள் முக்கியம் . அந்த விமர்சனங்களுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் . விமர்சனம் செய்பவர்கள் பொசிட்டிவ்வாக விமர்ச னங்களை முன்வைத்தால் அதன் ஊடாக நாங்கள் எங்களுடைய பணிகளைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும் .

'தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் நியாயமான அரசியல்தீர்வை எட்டமுடியாது'. கூட்டமைப்பு.

இலங்கையில் போர்க்கால இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரத் திணைக்களத்தின்
கணக்கெடுப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .

கூட்டமைப்பின் தலைவர்கள் வவுனியா நகரசபையில் கூடி செவ்வாய்க்கிழமை நடத்திய உயர்மட்டக் கூட்டத்தின்போதே , இந்தக் கணக்கெடுப்பை நிராகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் .

இதனிடையே , இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும் அதன்மூலம் நியாயமான அரசியல்தீர்வை எட்டமுடியாது என்றும் , காலப்போக்கில் நிலைமைகளை அவதானித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் . சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபையின் முதலமைச்சர் , மாகாண அமைச்சர்கள் , உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் .

ஆயினும் , வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , வினோ நோகராதலிங்கம் ஆகியோர் சமுகமளித்திருக்கவில்லை .

' குறிப்பாக காணி அபகரிப்பு , இராணுவ பிரசன்னம் , பெண்கள் விவகாரம் ஆகிய விடயங்கள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கருத்துக்கள் பரிமாறினர் . குறிப்பாக புள்ளி விபரத் திணைக்களம் தற்போது சேகரித்து வருகின்ற தகவல் சேகரிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது ' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் .

விக்னேஸ்வரன் ஊடவியலாளர் சந்திப்பில் இல்லை

யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டம் பற்றி நிபுணர்குழு அமைத்து முதலமைச்சர் ஆராய்வார்

இறுதியாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் . ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருக்கவில்லை .

வலிகாமம் , சம்பூர் உட்பட பல்வேறு பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் . இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு , மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் குறைக்கப்பட்டு , பெண்களுக்கு ஏற்படுகின்ற ஆபத்துக்கள் நீக்கப்பட்டு , மக்கள் தொழில் செய்வதற்கு இடையூறாக கொண்டு வரப்பட்டுள்ள பல தடங்கல்கள் நீக்கப்பட வேண்டும் போன்ற முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திற்குள் இருக்கின்ற சில உள்ளுராட்சி மன்றங்களில் வரவுசெலவுத் திட்டங்களைத் தோற்கடிப்பதற்காக எதிர்த்து வாக்களித்த கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்தும் - உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது உட்பட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது .

சர்ச்சைகளை கிளப்பியுள்ள ' இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ' குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பாக இந்தக் கூட்டத்தின்போது ஏதேனும் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என கேட்டபோது , ' அந்த விடயம் சம்மந்தமாக முதலமைச்சர் ஒரு நிபுணர் குழுவை நியமித்து அவர்களிடமிருந்து ஒரு அறிக்கையை பெற இருக்கின்றார் . அந்த அறிக்கை வந்தபிறகு அந்த விடயம் சம்மந்தமாக மேலதிகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் ' என்று சம்பந்தன் கூறினார் .

வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்

வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார். 

 உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அச்சுறுத்தல் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்: கூட்டமைப்பு

நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த தெரிவுக்குழுவில் பங்குபற்றாமல் இருக்கவேண்டும் என்பதே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பலரது கருத்தாகும் என்று கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர். இந்த விசேட கூட்டத்தின் போதுஇ வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. விசேடமாக காணி அபகரிப்புஇ இராணுவம்இ பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.

 விசேடமாக புள்ளிவிபரத்திணைக்களம் தற்போது சேகரிக்கும் புள்ளிவிபரம் தொடர்பாக பலருடைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் புள்ளிவிபரத்திணைக்களத்தின் விபரம் திரட்டும் செயற்பாட்டை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக தீர்மானம் எடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக வலிகாமம்இ சம்பூர் உட்பட ஏனைய பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் இல்லாது ஒழிக்கப்பட்டு பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் நீக்கப்பட்டு மக்கள் தொழில் செய்வதற்கு இடையூறாக உள்ள பல விடயங்கள் நீக்கப்படவேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

 தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது. இதேவேளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அதிகாரத்திற்குள் உள்ள சில உள்ளுராட்சி மன்றங்களில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. 

அவ்வாறு வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக எதிர்த்து வாக்களித்தவர்களுக்களை கட்சியில் இருந்தும் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது உட்பட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதவேளை இவ்வாறான ஒற்றுகூடல்கள் எதிர்காலத்தில் கிரமமாக முன்னெடுப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்தார்.

கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் எம்.பிக்களையும் வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

 அரசியல் நிலைமைகளையும், அவர்களின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்யும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

 வடமாகாண சபை தேர்தலின் பின்னர் ஒரு பொதுவான கருத்தாடலுக்கான வாய்ப்பாக இந்த கலந்துரையாடல் அமையுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

 நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்துக்கு 19 உறுப்பினர்கள் உள்ளனர். நாம் போனால் எமக்கு நான்கு இடங்கள் கிடைக்கும். 

இதனால் எமது கருத்து எடுபடாது போகும். இந்நிலையில் நாம் ஒரு தீர்வில் ஈடுபாடின்றி இருக்கின்றோம் என்பது இதன் பொருளாகாது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி – இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சந்திக்க ஏற்பாடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இந்த வாரம் இடம்பெறும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சபை மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். 

 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அழைப்பை விடுத்தார். 

 இந்த நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மோட்டார், வீடமைப்பு திணைக்களங்களை வட மாகாண சபையின் கீழ் உருவாக்க கோரிக்கை

வட மாகாண சபையினால் கோரப்பட்டுள்ள இரு திணைக்களங்களை நியமிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நிதி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். 

 வட மாகாண சபையின் கீழ் மோட்டார் போக்குவரத்து மற்றும் வீடமைப்புத் திணைக்களங்களை புதிதாக உருவாக்குவதற்கான கோரிக்கைகளை வட மாகாண சபை கோரியிருந்தது. இந்நிலையிலேயே குறித்த இரு திணைக்களங்களையும் உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு நிதியமைச்சின் கீழ் இயங்கும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை, வட மாகாண சபையினால் கோரப்பட்டுள்ள இரு திணைக்களங்களை உருவாக்குவது தொடர்பிலும் அதற்கான நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு வடமாகாண சபைக்கு ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

 இந்நிலையிலேயே மேற்படி இரு பிரிவுகளையும் அதிகார சபையாகவோ அல்லது திணைக்களமாகவோ நிறுவுவது தொடர்பில் தேவையான ஒத்துழைப்பை மாகாண சபைக்கு வழங்குமாறு நிதியமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு ஆளுநர் எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இந்த அங்கீகாரம் கடந்த சனிக்கிழமை ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2013ஆம் ஆண்டுக்கான நிதி நியதிச் சட்டத்திற்கும் ஆளுநரின் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

 வட மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டமும் 2013 ஆண்டின் முதலாம் இலக்க நிதி நியதிச் சட்டமும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரானால் டிசெம்பர் 12ஆம் திகதி மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாகாண ஆளுநரின் அங்கீகாரத்திற்காக வரவு–செலவுத் திட்டம் மாகாண பிரதம செயலாளருக்கு மாகாண சபை தவிசாளரினால் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் வரவு-செலவுத் திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தின் பிரதி மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண சபை தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஆளுநரின் அங்கீகாரம் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் வடமாகாண சபை செயலகம் மேற்கொண்டு வருவதாக தவிசாளர் தெரிவித்தார்.

நியாயமான அரசியல்தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்கு தயார் – த.தே.கூ

இலங்கையில் 13 வது அரசியலமைப்புத் திருத்த வரையறையை தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு  தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

இந்த விடயத்திற்காக பாராளுமன்றத்  தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13 ஆம்  திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் நியமித்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்ற அரசியல் தீர்வினை  பரிந்துரை செய்துள்ளதாக அவர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்

வரவுசெலவுத் திட்ட நிறைவுரையின்போது  ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

‘ஜனாதிபதியின் அழைப்பை தமது கூட்டமைப்பு கவனமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்த இரா சம்பந்தன், உள்நாட்டிலேயே பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும்  செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்  இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

’13 ஆம்  திருத்தத்தை முற்றாக இல்லாது செய்வதற்கான அல்லது அதிகாரங்களைக் குறைப்பதற்கான’ தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது

ஒரு நியாயமான அரசியல்தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தால், ‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் தாம் நிராகரிக்கப் போவதில்லை என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

தமிழ்த் தலைவர்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விவகாரங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ் அரசியல் தலைவர்கள் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 வரவு செலவுத் திட்டம் தொடர்பான மூன்றாம் வாசிப்பு விவாத நிறைவு உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனப் பிரச்சினை மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்

. தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் கை கோர்த்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதனைப் போன்றே வட மாகாணசபை வரவு செலவுத் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 ஆக்கபூர்வமான முறையில் விமர்சனங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை நல்வழிப்படுத்துமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சிகளை கோரியுள்ளார். உள்ளக முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணமாக திகழ முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நாட்டில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்க சாத்தியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் பிழையானது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பிழையானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வடமாகாண உள்ளூராட்சி மன்றங்கள் மன நிறைவு தருவதாக இல்லை – விக்னேஸ்வரன்

வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக இல்லை என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

 இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

 யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. அங்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து - “வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவு தருவதாக அமையவில்லை.

 முதன் முதலாக தொடங்கப்பட்ட வட மாகாண சபை என்பதால், பல பூர்வாங்க விடயங்களில் என் கவனம் உள் நுழைந்து இருந்ததால் முழுமையான கவனத்தை உள்ளூராட்சி மன்றங்களின் மீது செலுத்த முடியவில்லை. உள்ளூராட்சி உறுப்பினர்களின் சுயநலம் கட்டுக்கடங்காமல் செல்வதை நான் அவதானித்துள்ளேன்”

வடமாகாணசபை புஸ்வாணமா என்பது பற்றி விக்கினேஸ்வரனிடம் தான் உலகம் கேட்கும்

சர்வதேச சமூகத்திடம், தனக்கு சார்பாக இந்த அரசு இன்று எடுத்து காட்டிவரும் ஒரே சாதகம், வடமாகாணசபை தேர்தலை நடத்தி, வடக்கில் வட மாகாணசபையை நிறுவியது ஆகும். இன்று இந்த சாதகமும், பாதகமாகும் நிலைமை வடக்கில் தோன்றி வருகிறது. வடக்கில் தேர்தலை நடத்தி, மாகாணசபை அமைக்கப்பட்டாலும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரின் நிர்வாகத்துக்கு எந்த வித அதிகாரங்களும் 13ம் திருத்தத்தின்படி வழங்கப்படாமல், தொடர்ந்தும் ஆளுநர் ஆட்சியே நடக்கின்றது என்ற கருத்து இன்று மேலெழுந்து வருகிறது.


அடுத்த மார்ச் மாதம் வரப்போகும் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் இதுபற்றி திட்டவட்டமாக தெரிந்து கொள்ளும் தேவை உலகத்துக்கு இருக்கிறது.

இது உண்மையா என்பதை பற்றி உலகம் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம்தான் உலகம் கேட்டு தெரிந்து கொள்ளுமே தவிர வடக்கு ஆளுநர் சந்திரசிறியிடம் கேட்காது என்பதை உங்கள் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வீ -எப்எம் பண்பலை வானொலியில் “சித்தாமுள்ள” என்ற சிங்கள மொழியிலான பிரபல நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் எச். ஆர். மித்ரபாலவிடம் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரையாடிய மனோ கணேசன் கூறியதாவது,

நீங்கள் பட்ஜெட்டில் மாகாணசபைகளுக்கு 148 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இதில் ஊழியர் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு 111 பில்லியன் போக மிகுதி 37 பில்லியன்தான் மாகாணங்களின் அபிவிருத்தி நிதி. இதுவும் வட மாகாணசபை உட்பட ஒன்பது மாகாணசபைக்குமான தொகை என்பதை மறக்க வேண்டாம். ஆனால், பாதுகாப்பு, நகர அபிவிருத்தி என்ற ஒரே ஒரு அமைச்சுக்கு மட்டும் 270 பில்லியன் ஒதுக்கியுள்ளீர்கள்.

போலிஸ், காணி விடயங்களை தவிர்த்து பார்த்தாலும் கூட 35 விடயங்கள் மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விடயங்களையும் இன்று மத்திய அரசாங்கமே கையில் எடுத்து கொண்டுள்ளது. ஆகவே மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆனால், இந்த அரசியலமைப்பை மீறும் செயல் பற்றி ஏனைய மாகாணசபைகள் மூச்சு விடுவது இல்லை. வடமாகாணசபையும் இப்படியே சொல்வதை கேட்டுக்கொண்டு, தருவதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

இந்த பம்மாத்தை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வடக்கில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை வைத்துக்கொண்டே, அதிகாரங்களை ஆளுநர் மூலம் நடைமுறைபடுத்தும் உங்கள் போக்கு விரைவில் முடிவுக்கு வரும். ஒன்றில் மாகாணசபை முறைமையை ஒழியுங்கள். அல்லது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்துக்கு சட்டப்படி உள்ள அதிகாரங்களை வழங்குங்கள்.

உலகத்துக்கு வட மாகாணசபை தேர்தலை நடத்திவிட்டோம், வட மாகாணசபையை அமைத்துவிட்டோம் என அறிவித்தல் கொடுத்துவிட்டு மறுபுறம் அதை ஒரு புஸ்வாண வெற்று சபையாக வைத்திருக்க பார்க்கிறீர்கள். நாடு முழுக்க மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரம் இல்லையென்றால் எதற்காக 111 பில்லியன் ரூபா செலவில் ஊழியர்களும், கட்டிடங்களும், நிர்வாக செலவுகளும் என கேட்கிறேன்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் வருகிறது. அதற்கு முன்னர் உலகம் வடக்கில் மாகாணசபை நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறது. அதுபற்றி இப்போதே தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆளுனர் சந்திரசிறி ஒரு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல. எனவே வடக்கு மாகாணசபை நிர்வாகம் பற்றி வடக்கு முதல்வர் கூறும் கருத்துக்கு மிகவும் முக்கியத்துவம் காத்திருக்கின்றது.

முதல்வர் என்ற பெயரில் வடமாகாணசபையை தொடர்ந்து வெற்று புஸ்வான சபையாக வைத்துக்கொண்டு இருக்க விக்கினேஸ்வரானால் முடியாது. மறுபுறம் இந்த சபையை சுட்டிக்காட்டி உலகத்துக்கு பொய்மை தோற்றம் காட்டும் அரசின் முயற்சிக்கு துணை போகவும் அவரால் முடியாது. ஆகவே அவர் உரிய நேரத்தில் உண்மையைதான் கூறுவார். அதைதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

அதற்கு முன்னர் வடமாகாணசபைக்கு, 13ம் திருத்தத்தின்படி உரிய அதிகாரங்களை வழங்கி நிலைமை பாரதூரமடையமுன் அதை சீர் செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதைத்தான் உங்கள் அரசு தலைவர் ஜானதிபதிக்கு சில தினங்களுக்கு முன்னர் நான் சொன்னேன். இப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச, வடக்கு வசந்தம் திட்ட பொறுப்பில் இல்லையென தெரிகிறது. அதில் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொறுப்பு வகிப்பதாக, ஜனாதிபதியின் பேச்சில் தெரிகிறது.

எனவே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஒரு நிகழ்வில் சந்தித்த போது இதையே அவருக்கு நான் சொன்னேன். வடக்கில் சுமூகமான நிலைமை நிலவுமானால் அது தெற்கில் எங்களுக்கும் நல்லது என்பதாலும் இதை நான் சொன்னேன். இதை கேட்டு தவறை திருத்தி கொள்வது உங்கள் பொறுப்பு. நிலைமை கைமீறி போனபின் விக்கினேஸ்வனையோ, எங்களையோ குறை சொல்வதில் பிரயோஜனம் இல்லை.

வடமாகாண ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாடு! 24ல் வவுனியாவில் கூடுகின்றது தமிழ் கூட்டமைப்பு

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தன்னிச்சையான, மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் 24ம் திகதி வவுனியாவில் ஒன்றுகூடவுள்ளனர்.

 இதன்போது, தமிழர் தாயகத்தில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் தீர்வு நடவடிக்கையில் அரசு காட்டும் அசமந்தப் போக்கு ஆகியவை உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவு ஒன்று எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பு வட்டா ங்கள் தெரிவிக்கின்றன. 

 வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 9 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் முதன்முதலாக ஒன்றுகூடி நடத்தும் முக்கிய சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முக்கிய சந்திப்பு வவுனியாவில் நடத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. 

 இரா.சம்பந்தன் எம்.பின் தலைமையில் நடைபெற்ற இந்த நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பா.அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 இந்தக் கூட்டத்தில் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ள 2014 ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாசிப்புக்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அரசால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சுக்கே இம்முறையும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையால் மேற்படி முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இனப்பிரச்சினைக்கு முதற்காரணம் மொழி: அப்பாத்துரை விநாயகமூர்த்தி

மொழி காரணமாகவே இனப்பிரச்சினை ஏற்ட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். 1956ம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கவில்லை.

 தனிச் சிங்கள மொழிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரே முரண்பாடுகள் ஏற்பட்டது. இரண்டு இனங்கள் ஒரு மொழி என்ற அடிப்படையில் பிரச்சினைகள் உருவாகின என்றார். இதேவேளை, போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் மீள்குடியேற்றப்படாத நிலையில் காணப்படுகின்றனர்.

 போரினால் இடம்பெயர்ந்த பலர் இன்னமும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – த.தே.கூ

தோட்ட நிறுவனங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார். 

 யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, கணவரை இழந்த விதவை பெண்களுக்கு, கால்நடைகளை வழங்கி, அவர்களது வாழ்க்கை முன்னேற்றமடைய செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் பாராளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறி முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு கடிதம்! கலந்துரையாட வருமாறு அழைப்பு

வடக்கு மாகாண சபையின் எதிர்­கால செயற்­றிட்­டங்கள் தொடர்­பாகவும் பிணக்­குகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வட­மா­காண ஆளுநர் ஜீ.ஏ.சந்­தி­ர­சிறி முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு நேற்று முன்­தினம் மாலை கடிதம் ஒன்­றினை அனுப்­பி­வைத்­துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் செயற்­பா­டு­க­ளுக்கு வடக்­கு­ மா­காண சபையின் அதி­கா­ரிகள் பல்­வேறு தடை­களைப் பிர­யோ­கிப்­ப­தா­கவும் வட­மா­காண ஆளு­நரை மாற்ற வேண்டும் எனவும் முத­ல­மைச்சர் தெரி­வித்­துள்ள நிலையில் ஆளுநர் இக்­க­டி­தத்­தினை அனுப்­பி­வைத்­துள்ளார். 

 ஆளு­நரின் அக்­க­டி­தத்தில், வடக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்­டுக்­கான செயற்­பா­டுகள் தற்­போதை நிர்­வாகச் சிக்­கல்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை விரை­வாக மேற்­கொள்­ளு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

 ஆளு­நரின் இக்­க­டிதம் முத­ல­மைச்­ச­ருக்கு நேரில் சேர்­பிக்­கப்­பட்­டுள்­ளது இருந்­த­போ­திலும் இதற்­கான பதிலை இன்­னமும் முத­ல­மைச்சர் ஆளு­ந­ருக்கு அனுப்­ப­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்: வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் கண்டனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தத் திட்டத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பாதகமான பல விடயங்கள் குறித்து வடமாகாண சபை கவனத்தில் கொள்ளவில்லை என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளத் தலைவர் செ.சிவப்பிரகாசம் இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம் சுமத்தியிருக்கின்றார். இந்தத் திட்டம் பற்றி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு என்ன சொல்லப் போகின்றோம், இந்தத் திட்டத்தில் நாங்கள் உங்களுக்கு உறுதியாக இருப்போம். இதனை நாங்கள் ஏற்கவில்லை.

 இதனை உடனடியாக நிறுத்துவோம் என்று மாகாண சபையில் இருந்து எங்களுக்கு இன்று வரையில் எந்த பதிலும் வரவில்லை. மாறாக, இரணைமடு குளத்தில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள். ஆகவே, எங்களுக்கு மாகாண சபையோ அரசியல்வாதிகளோ எவரும் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களை நாங்கள் நம்பவில்லை. 

நம்பக் கூடிய வகையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. இறுதியாக, உறுதியாக, தெட்டத்தெளிவாக நாங்கள் எங்களுடைய தீர்மானத்தை முன்னெடுப்போம். இந்தத் திட்டத்தை எங்களால் நிறுத்த முடியும். அதை நாங்கள் செய்து காட்டுவோம். இதுதான் எங்களுடைய கருத்து, முடிவு என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் செ.சிவப்பிரகாசம் தெரிவித்தார். 

 இங்கு கருத்து வெளியிட்ட பெரிய பரந்தன் விவசாய அமைப்பின் தலைவர் யோகநாதன், இரணைமடு குளத்தின் தண்ணீரானது கிளிநொச்சி மாவட்டத்து மக்களுக்கே காணாமல் இருக்கும் போது இங்கிருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிப்பது பொருத்தமற்ற செயலாகவே நாங்கள் கருதுகின்றோம் என்றார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகளுக்கு இந்தக் குளத்தில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. 

ஆகவே இந்தக் குளத்தை அபிவிருத்தி செய்து அதிக நீரைப் பெற்று அதனை இந்த காணிகளுக்கு வழங்க வேண்டும். எங்களுடைய விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் காணாமல் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் யோகநாதன் செய்தியாளர்களிடம் கூறினார். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இராமநாதபுரம் விவசாய அமைப்புத் தலைவர் சிவமோகன், 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு இப்போது நீர் வழங்கப்படுகின்றது. 

 இன்னும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலத்திற்கு இந்தக் குளத்தில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டிய தேவை இருந்தும் நீர் வழங்கப்படாமல் இருக்கின்றது இந்த நிலையில் இங்கிருந்து தண்ணீரை எவ்வாறு வெளியில் கொண்டு செல்ல முடியும் என்று வினா எழுப்பினார். இரணைமடு குளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதனை அபிவிருத்தி செய்யுங்கள். அதில் அதிக நீரைச் சேமிப்பதற்கும் அதன் மூலம் எங்களுடைய விவசாய நிலங்கள் பயனடைய வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம். இந்த அபிவிருத்திக்கென வருகின்ற பணத்தை வேண்டாம் திரும்பிப் போகட்டும் என்று நங்கள் ஒருபோதும் கூறவில்லை என்றும் சிவமோகன் கூறினார் இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்கின்ற 21 விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வடமாகாண விவசாய அமைச்சுக்குப் பேருந்துகள் அன்பளிப்பு. [படங்கள் இணைப்பு]

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுடன் இரண்டு பேருந்துகளை அன்பளிப்புச் செய்துள்ளது . இப்பேருந்துகளை முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களங்களிடம் வடக்கு மாகாண விவசாய , கமநல சேவைகள் , கால்நடைஅபிருத்தி , நீர்ப்பாசனம் , மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ . ஐங்கரநேசன் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார் 

. கையளிக்கும் நிகழ்வுகள் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது . அதன்படி அமைச்சர் பொ . ஐங்கரநேசனிடம் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பேருந்தை முல்லை . மாவட்டத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் த . யோகேஸ்வரனும் , மன்னார் மாவட்டத்துக்கான பேருந்தை மன்னார் மாவட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் பொ . அற்புதச்சந்திரனும் பொறுப்பேற்றுக் கொண்டனர் . 

 இப் பேருந்துகள் விவசாய அறிவுசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகளினதும் விவசாயப் போதனாசிரியர்களினதும் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களினதும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளன என இதேவேளை மாகாண விவசாயப் பணிப்பாளர் சி . சிவகுமார் தெரிவித்துள்ளார் .





வடக்கு மக்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்!- செல்வம் எம்.பி.

வட மாகாண தமிழ் மக்களை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

இராணுவத்தினையும் ஆளுநரையும் வைத்து வடக்கு மக்களை அடக்கி ஆட்சி நடத்துவதில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இரணைமடு - யாழ்ப்பாணம் நீர் விநியோகத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

 கூட்டமைப்புக்குள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் முரண்பாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com