இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரவுசெலவுத்திட்டம் அல்ல என்பதை இதன் வாசிப்புகளில் இருந்தும், முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட “தயாரிக்கப்பட்ட ஆவணங்களை நான் வாசிக்கின்றேன்” என்ற வசனத்தில் இருந்தும் எம்மால் கண்டுகொள்ளமுடியுமாக இருக்கின்றது. எனவே இது வேறு சிந்தனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
தன்னிறைவான அபிவிருத்தி குறித்து உலகம் கவனம் செலுத்துகின்றது. சமூக,பொருளாதார, அரசியல் விவகாரங்களில் அபிவிருத்தி ஏற்படவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு கொடிய யுத்தம், அழிவு என்பவற்றை சந்தித்த சமூகமொன்றில் அபிவிருத்தி குறித்த பார்வையானது முழுமைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
சமூகத்தின் எல்லாத் தளங்களையும் சென்றடையக்கூடிய அமைப்பில் அது ஒழுங்குபடுத்தப்படவேண்டும். ஆனால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது அத்தகைய முழுமைத்தன்மையுள்ளதாக அமையவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
குறிப்பாக மீள எழுகின்ற ஒரு சமூக அமைப்பில், மீளக்குடியேறுகின்ற ஒரு சமூக அமைப்பில் ஏராளமான விடயங்கள் கவனிக்கப்படவேண்டியிருக்கின்றது. ஆனால் எமது ஒதுக்கீடுகளில் மீளக்குடியேற்றம் என்கின்ற விடயத்துக்கு எவ்வித ஒதுக்கீடுகளும் இருப்பதாக என்னால் அறிய முடியாதிருக்கின்றது.
அத்துடன் மாகாண வீடமைப்பு என்னும் தலைப்பின் கீழ் இரண்டு மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் ஆளுனரின் செல்வினங்களுக்கு 107 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் பொறுத்தபாடு குறித்து என்னவென்று குறிப்பிடுவது, அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றோர், விதவைகள், அநாதைகள் குறித்து எமது வரவு செலவுத்திட்டத்தில் எதுவித பேச்சுகளும் இடம்பெறவில்லை. புனரமைப்பு, புனர்வாழ்வு குறித்தும் பெரிதாக எதனையும் குறிப்பிட முடியாதுள்ளது.
எனவே எமது வரவு செலவுத்திட்டம் மாகாணசபையினை கொண்டு நடாத்துவதற்கான வரவு செலவுத்திட்டமே தவிர எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற வரவு செலவுத்திட்டமாக ஒருபோதும் நோக்கப்பட முடியாது.
ஆனால் உறுப்பினர்களாகிய எமக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது. குறித்த வரவு செலவுத்திட்டத்தை ஏகமனதாக அங்கீகரித்தோம் என்ற பத்திரிகை செய்தியைவிடவும் இதனை நன்கு அலசி ஆராய்ந்து, இதன் நுணுக்கங்களை அறிந்து எமது மக்களுக்கு நாம் எத்தகைய சேவைகளை செய்ய முடியும், எமது தேவைகளை நிறைவேற்றுவதற்கான மாற்று வழிவகைகள் என்ன போன்ற விடயங்களை நாம் கண்டறியவேண்டும், இதற்கான நல்லவாய்ப்பாக இவ்வரவு செலவுத்திட்ட விவாதத்தை நாம் எடுத்துக்கொள்வோம்.
இறுதியா ஒரு கருத்தைத் தெரிவிக்க விரும்புகின்றேன். அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. இதனை இந்த நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடாகவே நான் காண்கின்றேன். இந்த நாட்டில் பந்தம் பிடிக்கின்ற, அடக்குமுறையான, அரசியல் ஒழுங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது தமிழ், முஸ்லிம் மக்களை மாத்திரமல்ல, இந்த நாட்டின் சிங்கள மக்களையும் பாதிக்கும் அரசியல் ஒழுங்காகும். இதனைத்தான் தற்போதைய ஆளும் தரப்பினர் தமது அரசியல் நடைமுறையாக எல்லா மட்டங்களிலும் அறிமுகம் செய்துள்ளனர். இதன் ஒரு அம்சம்தான் எமது செயலாளர்கள், அதிகாரிகளின் மீதும் பிரயோகிக்கப்பட்டிருக்கும் அழுத்தங்களாகும்.
அவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள், அவர்களும் சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்தவர்கள்தான், அவர்களுக்கும் எம்முடன் இணைந்து செயலாற்ற அதீத ஆர்வமும் விருப்பமும் இருக்கின்றது. நாம் அவர்களது விடுதலைக்காகவும் முயற்சிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இரு சாராருக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுமாக இருப்பின் மாகாண சபையின் செயற்பாடுகளை மிகவும் சீராக முன்கொண்டு செல்ல முடியும். இதற்காக நல்ல சூழல் உருவாக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டவனாக எனது ஆரம்ப உரையினை நிறைவு செய்கின்றேன்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment