Home » , » மாகாண சபைத் தேர்தலை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்தினால் மாகாணம் அதீதவளர்ச்சி பெறும் அமைச்சர் நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தலை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்தினால் மாகாணம் அதீதவளர்ச்சி பெறும் அமைச்சர் நம்பிக்கை

வடமாகாண சபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்தும் பட்சத்தில் இப்பகுதி மென்மேலும் முன்னேற்றம் காணுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.


கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (10) நடைபெற்ற டிப்ளோமா ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகால எதிர்ப்பார்ப்போடு காத்திருந்த உங்களுக்கு சேவையாற்றக் கூடிய வகையிலும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய வகையிலும் நியமனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நியமனங்களின் ஊடாக நீங்களும் நீங்கள் சார்ந்து வாழும் சமூகமும் மேம்பாடடையக் கூடிய வகையில் உங்கள் சேவைகள் அமையப் பெற வேண்டும்.

அதுமட்டுமல்லாது மேலதிக பயிற்சிகளைப் பெற்று எமது மாணவ சமூகத்திற்கு சிறந்த கல்விச் சேவையினை வழங்க வேண்டும். நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யும் பட்சத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது ஆசியோடு பலாலியிலும் மீள்குடியேற்றம் செய்ய முடியும்.

அதுமட்டுமல்லாது இப்பகுதி அபிவிருத்தியில் மென்மேலும் முன்னேற்றம் காணுமென்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்கள் உரையாற்றும் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கில் கல்வித்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்.

அதுமட்டுமல்லாது வடமாகாண கல்வித்துறை மேம்பாட்டிற்காக புதிதாக 1500 ஆசிரியர் நியமனங்களை நாம் குறுகிய காலத்திற்குள் வழங்கி வைத்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 235 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனப் பத்திரங்களை அமைச்சர், ஆளுநர் உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.

இதன்போது தகவல்தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குரிய தமிழ், சிங்கள மொழி மூல டிப்ளோமாதாரிகளும், உடற்கல்வி தமிழ் மொழி மூல டிப்ளோமாதாரிகளும் நியமனங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதில் 28 பட்டதாரிகள் சிங்கள மொழி மூல பட்டதாரிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.

இதனிடையே வடமாகாணத்தின் கல்வித்துறை மேம்பாட்டிற்காக அண்மையில் 247 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராசா ஆகியோரும் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com