Home » , , » கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யார் அமையவேண்டும் மனம் திறக்கின்றனர் வடபகுதி மக்கள்

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யார் அமையவேண்டும் மனம் திறக்கின்றனர் வடபகுதி மக்கள்

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு குழப்பத்தில் உள்ளது. மூன்று நாள்களாக நடத்தப்பட்ட கட்சிக் கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்மக்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்களது வெளிப்பாடு இப்படி இருக்கிறது.


 வவுனியாவிலிருந்து மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில்,

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைநிறுத்துவது என்பதுதொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகிறது.காலஅட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்த நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்படவேண்டியவரின் தகுதிகள்பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். குறிப்பாக சட்டஆளுமைபற்றியும்,ஆங்கிலமொழிப் புலமைபற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒருவரே தேவையெனவும் வலியுறுத்துகின்றனர்.

 இலங்கையில்ஆங்கிலமொழிப்புலமையையும்,சட்ட அறிவையும் தன்னகத்தேவைத்திருந்த லக்ஸ்மன் கதிர்காமர்,நீலன் திருச்செல்வம் போன்றோரின் மொழிப்புலமையும்,சட்டஅறிவும் யாருக்குபயன்பட்டது? தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதபோராட்டங்கள் முடக்கப்பட்டதன் பின்னர்,தமிழ் மக்களின் உரிமையைவென்றெடுப்பதற்கு இருக்கக்கூடியஒரே வழி சாத்வீக போராட்டங்களை விரிவுபடுத்துவதுதான்.

 எனவே இத்தகையசாத்வீக போராட்டங்களை நடத்துவதற்கு இன்றிருக்கக்கூடிய அரசியல் தலைமைகளை ஒருங்கிணைத்து செல்வதற்கு தமிழ் தேசிய செயல்பாட்டில் நீண்டகால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டஒருவரே,வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுதல் வேண்டும். இதுவே இங்குள்ளஒவ்வொருதமிழர்களதும் பேரவாவாகும். சட்டம் மற்றும் மொழியை யார் வேண்டுமானாலும்,யாருக்கும் கற்றுக்கொடுத்துவிட்டுப்போகலாம்.

 ஆனால் தேசிய உணர்வை கற்றுக்கொடுக்கமுடியாது. அது இயல்பாகவே இரத்தத்தில் கலந்திருக்கவேண்டும். எனவே பிறப்பிலேயேதமிழ் உணர்வும்,இனப் பற்றும் சிந்தனையில் இரண்டறக் கலந்து புரையோடிக்கிடக்கும் ஒருவரேவடக்கின் முதலமைச்சராக வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

 முல்லைத்தீவிலிருந்து பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர், முல்லைத்தீவு மக்களைப் பொறுத்தவரை இரண்டு பேருக்குமே ஆதரவு தெரிவிக்கின்றனர்.

 குறிப்பாக விக்னேஸ்வரன் வெளியில் இருந்து வருபவர். மாவை ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர். அவர் அந்த நிலையில் இருந்தும் மக்களுக்குப் பணியாற்றலாம். விக்னேஸ்வரனை நிறுத்துவத கூட்டமைப்பு,எனவே கூட்டமைப்பின் விருப்பப்படியே அவர் செயற்படவேண்டும். அப்படி அவர் நடந்துகொள்ளவில்லை என்றால் பதவியிலிருந்து விலக்கிவிடும் அதிகாரம் கூட்டமைப்புக்கு இருக்கிறது.

 இதை விட விக்னேஸ்வரன் குறித்தும் அவரது நிலைப்பாடு குறித்தும் போதுமான செய்தி எங்களிடம் இல்லை. அவரை ஒரு நீதிபதியாக அறிந்திருக்கிறோம். அது மட்டுமே. மாவை சேனாதிராஜா எம்மோடு வாழ்ந்தவர். அவர் ஈழப்போராட்டம் பற்றியும் தமிழ் மக்களது துயரங்கள் பற்றியும் சரியான புரிதலுடன் உள்ளவர்.

 முல்லைத்தீவில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் போதாதுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஏனோ தானோ என்றே வேட்பாளர்களைத் தெரிவு செய்தார்கள். இந்த நிலை வடமாகாண சபைத் தேர்தலிலும் ஏற்படக்கூடாது. சரியானவர்களைத் தெரிவுசெய்தால் கூட்டமைப்புடன் கட்டாயம் நாம் நிற்போம்என்றார்.

 மன்னாரில் இருந்து கருத்து தெரிவித்த மக்கள் பிரதிநிதி ஒருவர்,

 மாவைதான் முதலமைச்சர். யார் சொன்னது விக்னேஸ்வரன் என்று? நாங்கள் மாவையை முதலமைச்சராக்கவே விரும்புகின்றோம். அவர் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரது தமிழின உணர்வே எமது எதிர்கால முன்னேற்றத்துக்கு பொருத்தமானது.

 சட்ட வல்லுநர்கள் முதலமைச்சராகவேண்டிய கட்டாயம் இப்போது தமிழ்மக்களுக்கு இல்லை. தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட சட்ட நுணுக்கம் தேவைப்பட்டால் அதை வெளியில் இருந்து தர,ஆதரவளிக்க எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தேவையற்ற ஒரு விடயத்துக்காக கூட்டமைப்பு தமக்குள் முரண்படக்கூடாது. இயல்பான விடயங்களையும்,சாத்தியமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும்

என்றார். யாழ்ப்பாணத்தில் புத்திஜீவி ஒருவர் இப்படிக் கூறுகிறார்,

 விக்னேஸ்வரன் கொழும்பிலேயே அதிக காலம் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அவரால் சரிவர புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் அடிமட்டப்பிரச்சினைகளை ஆராயவோ தீர்த்துவைக்கவோ விரும்பமாட்டார்கள். மாவை மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். வடக்கு கிழக்கு மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதையே நாம் விரும்புகிறோம். கூட்டமைப்பு சரியான முடிவு எடுக்கும். அதன்படி தமிழ் மக்கள் வடக்குக்கு யார் முதலமைச்சர் என்பதைத் தீர்மானிப்பார்கள் என்றார்

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com