Home » , » ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனி இன்று கிளிநொச்சியில் வேட்பு மனு தாக்கல்.

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனி இன்று கிளிநொச்சியில் வேட்பு மனு தாக்கல்.

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று (31) ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிளிநொச்சி மாவட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் முதன்மை வேட்பாளராகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வைத்தியநாதன் தவநாதன் தலைமையில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் சகிதம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வைத்தியநாதன் தவநாதன், அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன், கந்தசாமி பிரகலாதன், ஆகியோரும் சிறிலங்கா சுதந்திர கட்சியில் கீதாஞ்சலி வேணுகோபால், ஏ.விஜயகிருஸ்ணன், ரி.தர்மசிறி மற்றும் மாரிமுத்து மகாதேவன் ஆகியோர் எதிர்வரும் வடக்கு மாகாண சபையில் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் சகிதம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் கட்சியின் பிரமுகர்கள் சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் கட்சியின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் சகிதம் மாவட்டச் செயலகத்திற்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள், மாகாணசபை முறையை நாம் கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதை முன்னர் எதிர்த்தவர்கள் இப்போது போட்டியிடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளோடும் அவர்களுடைய வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்த அரசியல் எம்முடையது. அப்படி எமது அரசியல் வேலைகள் இருக்கின்றபடியால்தான் எமக்கான ஆதரவு மக்கள் மத்தியில் பெருகிவருகிறது.



போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அந்த மக்களுடன் நின்று இரவு பகலாக உழைத்து வருகிறோம். இதை எமது மக்கள் நன்றாக அறிவார்கள். எனவேதான் அவர்கள் எம்மை ஆதரிக்கிறார்கள். தேர்தலுக்காக வரும் விருந்தாளிகளையும் மக்களுக்கு வெளியே நின்றவர்களையும் மக்கள் நன்றாக அறிவார்கள். கடந்த காலத்தில்தாம் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இன்று மக்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர். எனவே இனிமேல் மக்களை எவராலும் ஏமாற்றி விட முடியாது. மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. மாகாணசபைத் தேர்தலில் நாம் நிச்சயமாக வெற்றியடைவோம். இந்த நம்பிக்கையை மக்கள் எமக்கு அளித்துள்ளனர். நாங்கள் வெற்றியடைவதன் மூலமாக மக்களே வெற்றியடைவார்கள். மற்றவர்கள் வெற்றியடைந்தால் அது அவர்களுடைய வெற்றியாகவே இருக்குமே தவிர, மக்களுக்கு எந்த விதமான நன்மைகளும் கிட்டப்போவதில்லை. எனவே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்களுடைய தேவைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களையே ஆதரிப்பது என்ற தெளிவோடு அவர்கள் உள்ளனர். இங்கே திரண்டிருக்கிற ஆதரவாளர்கள் அதையே உணர்த்துகின்றனர். மக்கள் அபிவிருத்தியையும் அரசியல் உரிமையையும் ஒருங்கிணைந்தே பார்க்கிறார்கள். நாங்கள் இந்த இரண்டையும் ஒருங்கிணைந்த வழிமுறையின் மூலமாகப் பெறுவோம் என்று அவர்கள் நம்புகின்றனர்.

ஆகவே மீண்டும் சொல்கிறேன். மக்களின் மிகப்பெரும் ஆதரவுடன் நாம் மாகாணசபையைக் கைப்பற்றுவோம் எனக் குறிப்பிட்டார். 

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com