Home » , , , » தமிழ் மக்களின் வாக்குளைச் சிதைக்கவே சுயேட்சைக் குழுக்களை களமிறக்கியுள்ளது ; சுரேஷ் எம்.பி

தமிழ் மக்களின் வாக்குளைச் சிதைக்கவே சுயேட்சைக் குழுக்களை களமிறக்கியுள்ளது ; சுரேஷ் எம்.பி

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி தமக்கு வாக்களிக்கச் செய்வதற்காகவும் நவநீதம்பிள்ளை மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை ஏமாற்றுவதற்காகவும் சர்வதேசத்திற்கு பொய்யான தோற்றப்பாடுகளை காண்பிப்பதற்காகவுமே இராணுவத்தினர் அவசர அவசரமாக யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளை விடுவித்துள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறவேண்டுமாயின் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அச்சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நவநீதம்பிள்ளையின் வரவு, பொதுநலவாய நாடுகளின் வரவு, வடமாகாண சபைத் தேர்தல் என்பவற்றை காரணமாகக் கொண்டு சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காகவே இராணுவத்தினர் மக்களுடைய காணிகளையும் வீடுகளையும் கையளிக்கின்ற நடவடிக்கைகளில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுவது போல் அவருடை அழுத்தங் காரணமாகவோ அல்லது அவருடைய விருப்பம் காரணமாகவோ இவ்விடயம் இடம்பெறவில்லை. அப்படி டக்ளஸ் தேவானந்தா விருப்பத்துடன் இவ்விடயம் நடைபெற்றிருந்தால் வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற 6ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பினையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.

இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கு நாங்கள் ஏற்கனவே பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளோம். மேலும் பல வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் தீர்மானித்துள்ளோம். எம்மால் இவ்வாறு கொடுக்கப்பட்ட அழுத்தங்களால் தேர்தல் காலங்களில் இத்தகைய செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டு மக்களை ஏமாற்ற முற்படுகின்றது. இது டக்ளஸின் முயற்சியால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை என்ற கூறமுடியாது. தேர்தலை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய செயல்களில் இந்த அரசாங்கம் ஈடுபடுகின்றது.

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி இப் பகுதியில் இராணுவ முகாம்களை அகற்றியுள்ளோம். 13ஆயிரம் இராணுவத்தினர் தான் இருக்கின்றனர். ஆகவே பலாலி முகாமை மூடுமாறு கோரவேண்டாம் என அண்மையில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் அவதானமாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நாங்கள் யாழ். மாவட்டத்தில் மட்டும் பார்க்கவில்லை. வடமாகாணத்தில் ஒட்டு மொத்தமாக ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் இருக்கின்றனர். இதனை யாரும் மறுக்கமுடியாது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளில் வசித்து வருகின் 10 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பிரதேசத்தில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

10 இலட்சம் மக்களுக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் இராணுவத்தினர் தேவையா என்பதே எனது முதலாவது கேள்வியாகும். இந்த இராணுவத்தினருடன் இப்பகுதியில் கடற்படையினர், விமானப்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்) இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் படையினர் என பல்வேறு தரப்பினர் பாதுகாப்பு அமைச்சின் கட்டளைக்கமைய வடக்கில் செயற்படுகின்றனர்.

யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி கூறுவது போல் 13ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமல்ல 3 டிவிஷனில் உள்ள ஏறத்தாழ 30 ஆயிரம் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளனர். பலாலியில் மட்டுமல்ல வரணியிலும் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மிருசுவில், மீசாலை, முகமாலை, இயக்கச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ். நகரில் மட்டும் சிங்கள மகாவித்தியாலயம் இருந்த இடத்தில் இராணுவ முகாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் பல இடங்களில் புதிது புதிதாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இன்று சிவில் உடையில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இராணுவத்தினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இராணுவம் மக்களுடைய காணிகளை விட்டு விலகுகிறது என்பதற்கப்பால் இங்கே இருக்கக் கூடிய இன விகிதாசாரத்தின் அடிப்படையில் இராணுவத்தினரை நிறுத்தவேண்டும்.

இந்த நிலையில் இங்கு இராணுவத்தினரைக் காணவில்லை என யாழ்ப்பாணத்திற்கு வந்துசென்ற சுசில்பிறேம் ஜயந்த கூறுகின்றார். இராணுவத்தினர் சிவில் உடையில் நிறுத்தப்பட்டிருக்கும் பொழுது அவர் எப்படி இராணுவத்தினரைப் பார்க்கமுடியும். இப் பகுதியில் யார் என்ன பேசினாலும் எங்கு என்ன நடந்தாலும் இராணுவத்தினர் அப்பகுதிக்குச சமூகமளிக்கின்றனர். பாடசாலைக் கூட்டங்கள் உள்ளிட்ட சகல கூட்டங்களிலும் இராணுவப் பிரசன்னம் 100 வீதம் காணப்படுகின்றது. இக் கூட்டங்களில் இராணுவத்தினர் கலந்துகொள்ள முடியாது. இது அவர்களுடைய வேலை அல்ல. இக் கூட்டங்களில் தலையிடக்கூடிய உரிமை பொலிஸாருக்கே இருக்கிறது. பொலிஸார் சிவில் உடையிலும் இவ் விடயங்களில் தலையிடமுடியும் ஆனால் இராணுவத்தினரால் இவ் விடயங்களில் தலையிட முடியாது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, நடமாடும் சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளில் தலையிடுவதற்கு இராணுவத்தினருக்கு உரிமை கிடையாது. இவ் விடயத்தில் பொலிஸாருக்கும் உரிமையில்லை. ஆனால் இங்கு நடப்பது எல்லாம் தலைகீழாக உள்ளது. சுசில் பிறேம் ஜயந்தவுக்கும் இங்கு நடக்கின்ற விடயங்கள் தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் 11 கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றமை ஜனநாயகத்தைக் காட்டுகின்றது எனக் கூறுகின்றார். ஆனால் இந்க சுயேட்சைக் குழுக்களை இராணுவமும் இந்த அரசாங்கமுமே நியமித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுயேட்சைக் குழு வேட்பாளர் ஒருவர் தான் தமிழ்ச் செல்வத்தின் மாமன் இல்லை எனவும் தனக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இடம் கிடைக்கவில்லை அதனால் சுயேட்சையாகக் கேட்டு ஜனாதிபயின் கரங்களை பலப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனூடாக ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சுயேட்சைக் குழுக்களை அமைத்து மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வாக்குமோசடிகளிலும் வாக்குச் சிதறல்களிலும் ஈடுபடவுள்ளமையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

20 கட்சிகள் கேட்பது கேட்பது என்பது ஜனநாயகத்தின் வெளிப்பாடு அல்ல. இது இலங்கை அரசாங்கத்தினுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளின் வெளிப்பாடாகும்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் இராணுவப் பிரசன்னம் இல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய் பேசுகிறது என இராணுவமும் அமைச்சர்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபட்டு வருகின்ற கபே என்ற அமைப்பு வடக்கு மாகாணம் பெருமளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே பெருந்தொகையான இராணுவம் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. இதனை தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபட்டு வருகின்ற அந்த அமைப்பின் தலைவரான கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஆனால் இராணுவத்திரும் அமைச்சர்களும் இதனை வேறுமாதிரிக் கூறிவருகின்றனர்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இத் தேர்தல் நீதியானதாகவும் நேர்மையானதாகவும் நடத்தப்படவேண்டுமாயின் இப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் சிவில் உடையிலோ இராணுவ உடையிலோ வெளியில் நடமாடாத வகையில் முகாம்களுக்குள் முடக்கப்படவேண்டும். இதனூடாகவே இப் பகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்.

இங்கு இராணுவத்தை அகற்றி மக்களை மீளக்குடியமர்த்துகின்றோம் என சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக பொய்ப் பிரச்சாரங்கள் செய்வதற்குப் பதிலாக முற்றுமுழுதாக மக்களை மீளுக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வலி.வடக்கு, பலாலி, காங்கேசன்துறை என்பனவற்றில் உள்ள தமிழ் மக்களின் பிரதேசங்கள் இராணுவத்திற்காக அமைக்கப்பட்ட பிரதேசம் அல்ல. அப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இன்னமும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும். பலாலியை விடச்சொல்லிக் கேட்கவேண்டாம் என மக்களிடம் கோருவதற்கு ஹத்துருசிங்கவிற்கு உரிமை இல்லை. அப்பகுதியிலும் மக்களை மீள் குடியேற்றவேண்டும்.

இதேபோல் கிளிநொச்சியில் பரவிப் பாஞ்சான், முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு, மன்னாரில் முள்ளி ஆகிய பிரதேசங்களையும் மக்களிடம் கையளிக்கவேண்டும்.

எல்லாவற்றையும் மக்களிடம் ஒப்படைத்துள்ளோம் எனக்கூறுவது இவர்களுடை பொய்ப்பிரச்சாரம் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். டக்ளஸ்தேவானந்தா அரசாங்கம் அரசாங்க அமைச்சர்கள் இராணுவத் தளபதி போன்றோர் தெரிவிக்கின்ற இவ்வாறான பொய்யான விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உலகத்தையும் மக்களையும் ஏமாற்றுகின்ற விடயம் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.




0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com