Home » , , » கூட்டமைப்பு வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்: பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைப்பு

கூட்டமைப்பு வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்: பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைப்பு

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை என்ற பெயரில் அநாவசிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேற்று தம்மைச் சந்தித்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு விளக்கிக்கூறியுள்ளது.

அத்துடன் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ள நிலையில் , சுதந்திரமானதும் நீதியானதுமானத் தேர்தலை நடத்துவது எந்த வகையில் சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களைப் போலன்றி இத் தடவை நெடுந்தீவு பிரதேசத்திற்கும் சுதந்திரமாகச் சென்று தேர்தல் பிரசாரங்களை நடத்த உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

பொது நலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரு பிரதிநிதிகள் நேற்றைய தினம் காலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து உரையாடினர்.

இந்த சந்திப்பில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் சுமார் 12.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் வரை நீடித்தது .

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இந்தியா, உகண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளே நேற்றைய தினம் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களைச் சந்தித்து உரையாடினர்.

இச் சந்திப்பின் போது வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கூட்டமைப்புப் பிரதிநிதிகள் , தேர்தல் காலங்களில் வழமையாகவே கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இராணுவத்தினராலும் , புலனாய்வுப்பிரிவினராலும் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் அதே விதமான சம்பவங்கள் தற்போதும் ஆங்காங்கே அரங்கேற ஆரம்பித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பின் மூன்று வேட்பாளர்கள் புலனாய்வுப்பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் இந்த விதமான போக்குகள் ஒருபோதும் நீதி, நேர்மையான செயற்பாட்டுக்கு வழி சமைக்காது என்றும் எடுத்துக்கூறியுள்ளனர்.

மேலும் கடந்த தேர்தல்களின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட அச்சுறுத்தல்கள் , அடையாள அட்டைகளை பறித்துச் சென்றமை மற்றும் வாக்காளர் அட்டைகளை கிழித்ததெறிந்தமை , வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாதவாறு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பன எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் இடம்பெறாது இருப்பதை கண்காணிப்புக் குழுவினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அது மாத்திரமன்றி வாக்காளர்களுக்கு இறுதி நேரத்தில் சலுகைகளை வழங்குவது, அவர்களின் மனதை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்களிலும் அதிகாரத்தரப்பினர் ஈடுபடுவதாக குற்றஞ் சாட்டிய கூட்டமைப்பு பிரமுகர்கள் வவுனியா பிரதேசத்தில் சிவில் பாதுகாப்புப் படையினராக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு குறித்த அரசியல் கட்சி ஒன்று மோட்டார் சைக்கிள்களை வழங்கியுள்ளதாகவும் இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு ஆரம்ப தவணைப்பணத்தை முதலில் வழங்குமாறும் தேர்தலி்ல் குறி்த்த கட்சி வெற்றிவாகை சூடினால் தவணைப்பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லையென்று கூறியுள்ளதாகவும் இவ்வாறு ஐயாயிரம் பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் எட்டியுள்ளதாகவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது மாத்திரமன்றி கடந்த காலங்களில் நெடுந்தீவு உட்பட தீவுப்பகுதிகளுக்குச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் கட்சி ஒன்று அனுமதியளிப்பதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள கூட்டமைப்பினர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட உரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வடக்கில் சுதந்திரமான தேர்தல் ஒன்றையே தமிழ் மக்கள் எதிர் பார்க்கின்றனர். எனவே அவர்கள் எந்த விதமான அச்சுறுத்தல்களும் இன்றி தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அனைத்து தரப்பினரதும் ஒன்றிணைந்த சேவையிலேயே தங்கியுள்ளது என்றும் கூட்டமைப்பு எடுத்துக்கூறியுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக வடக்கில் இராணுவத்தினர் குறித்ததோர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதுடன் அதற்கு வாக்களிக்குமாறு மக்களை கோரி வருகின்றனர். இது அப்பட்டமான தேர்தல் சட்டமீறலாகும் என்றும் கூட்டமைப்பினர் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் வடக்கில் வன்முறைகள் தலைதூக்கும் என்று அச்சத்தை போக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இவையனைத்தையும் கவனமாக செவிமடுத்த குறித்த பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்புப் பிரதிநிதிகள், இவ்வாறான பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிட்டியுள்ளதாகவும் இது தொடர்பில் தாங்கள் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புப் பிரிவின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளனர் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com