Home » , , » கூட்டமைப்பின் வெற்றி நிச்சயம் என்கிறார் செல்லையா இராசையா.

கூட்டமைப்பின் வெற்றி நிச்சயம் என்கிறார் செல்லையா இராசையா.

வட மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகியுள்ளது . தேர்தல் கள நிலவரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன . இவ்வாறு , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் , காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான செல்லையா இராசையா கூறினார் . யாழ்ப்பாணம் பாஷையூர் அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் . 

 எப் . ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் , செயலாளர் மாவை சேனாதிராஜா , முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர் . தவிசாளர் இராசையா தொடர்ந்து உரையாற்றுகையில் , ' வட மாகாண தமிழ் மக்கள் நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தலில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாகவுள்ளதுடன் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை வலுப்படுத்த வேண்டுமென்பதிலும் அக்கறை கொண்டுள்ளனர் .

 இந்த முக்கியமான காலகட்டத்தில் கிடைத்துள்ள மாகாணசபை தேர்தலெனும் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம் தலைவர்கள் முன்னெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வடக்கு மக்கள் திடசங்கற்பம் பூண்ட நிலையிலுள்ளனர் . இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் அமோக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது . பல தினங்கள் வடக்கில் நம் மக்களை நேரில் சந்தித்த வகையில் , தேர்தல் கள நிலவரங்கள் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன . 

 இந்த நாட்டில் வாழும் உரிமை பெற்ற சிறுபான்மை சமூகங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமையிழந்து அல்லல்படும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் நம் மக்கள் சந்தித்துவரும் ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே அமைந்துவருகின்றன . இந்த வகையில் தன்மானத் தமிழர்கள் நாமென்பதை , நம்மை நசுக்கும் வஞ்சிக்கும் பேர்வழிகளுக்கு தேர்தல் மூலம் உணர்த்த வேண்டும் . ஒரே நாடு , ஒரே மக்கள் என உதட்டளவில் மேடைக்கு மேடை பேசிவருவோர் செயலில் நல்லிணக்கமற்ற செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து சிறுபான்மை சமூகங்களை வஞ்சித்து வருகின்றனர் . 

 இந்த நிலைமை தொடரக்கூடாது . சர்வதேச சமூகத்தின் அனுதாபம் எம்பக்கம் திரும்பியுள்ள நிலையில் சந்தர்ப்பவாதிகளாக வலம் வரும் அரச அடிவருடிகளின் பசப்பு வார்த்தைகளில் நம் மக்களெவரும் மயங்கிவிடக்கூடாது . இந்த நாட்டில் நாம் இரண்டாவது பிரஜைகளல்ல , சமத்துவமான , சமமான இனம் . வரலாற்று ரீதியாக ஆண்ட பரம்பரை என்பதை உறுதிப்படுத்துவோம் ' என்றார் .


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com