Home » , , » மிக மோசமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கக் கூடாது: சுரேஷ் எம்.பி.

மிக மோசமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கக் கூடாது: சுரேஷ் எம்.பி.

வடமாகாணத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றவர்களும் யாழ்.மாநகர சபையில் கடமையாற்றுகின்ற அரச ஊழியர்களும் வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சரின் தூண்டுதல்களினாலும் சட்டத்திற்கு முரணாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்தின், எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும். அவ்வாறு ஆட்சியமைக்கும்போது தேர்தலில் சட்டத்திற்குப் புறம்பாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாண சபைத் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சிக்குச் சார்பான வேட்பாளர்கள் தேர்தல் சட்ட திட்டங்க-ளுக்கு முரணாக நடந்து கொள்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பான முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கோரி வடமாகாண ஆளுநரும் அமைச்சரும் சமுர்த்தி அரச உத்தியோகத்தர்களையும் யாழ். மாநகர சபையின் அரச உத்தியோகத்தர்களையும் தூண்டி வருகின்றனர்.

யாழ். மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் பல இடங்களுக்குச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்கினை அளிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றார்கள். யாழ். மாநகர சபையானது ஈழ மக்களின் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே தற்பொழுது காணப்படுகிறது. அதனால் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் தூண்டுகின்றனர்.

சமுர்த்தி உத்தியோகத்தர்களைக் கண்காணிப்பதற்கென தென் பகுதியிலிருந்து 40 மேலதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்கள் இங்குள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எவ்வாறு அரச பணிகளைச் செய்கிறார்கள் எனப் பார்வையிடுவதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இங்குள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சட்டத்திற்குப் புறம்பான முறையில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நியமனம் பெற்ற பட்டதாரிப் பயிலுனர்களும் உயர்கல்வி அமைச்சின் கீழ் நியமனம் பெற்ற உதவி ஆசிரியர்களும் வடமாகாணங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தோடு வெற்றி கொள்ளும். அவ்வாறு வெற்றிபெற்று வடமாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் வடமாகாண சபைத் தேர்தலின் போது சட்டத்திற்குப் புறம்பான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தர்ம சங்கடமான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனவே அரச உத்தியோகத்தர்கள் வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர்களின் கட்டாயத்தில் தேர்தல் விதி முறைகளுக்குப் புறம்பாக செயற்பட வேண்டாம். உங்களை கட்டாயப்படுத்தினால் நீங்கள் நீதி மன்றின் வழக்கைத் தொடருங்கள்.

வடமாகாண சபை ஆளுநரும் தேர்தல் ஆணையாளரும் பிரதித் தேர்தல் ஆணையாளரும் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த உதவ வேண்டும். சகல அரச உத்தியோகத்தர்களும் தமது கடமைகளை ஒழுங்காகச் செய்யவேண்டும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளாகும். மிக மோசமான தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு இடம்கொடுக்கக் கூடாது.

இதேவேளை இன்று (நேற்று) நண்பர் 12 மணியளவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 40 ஆதரவாளர்களை இராணுவத்தினர் சுற்றிவளைத்து துண்டுப் பிரசுரங்களை பறித்தெடுத்துள்ளதோடு நீங்கள் மீண்டும் ஓர் யுத்தத்தை இம் மண்ணிலே ஏற்படுத்தப் போகிறீர்களா என எச்சரித்துன்னர். பின்பு அவ்விடத்திற்கு பொலிஸாரை வரவழைத்து 40 பேரையும் கைதுசெய்து சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

40 பேரில் 4 பேரை மட்டும் தடுப்புக் காவலில் வைத்துக்கொண்டு மீதி 36 பேரையும் பொலிஸார் விடுதலை செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக பிரசார நடவடிக்கைகளில் ஒரு போதும் ஈடுபடவில்லை. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதும் தேர்தல் சட்டத்தில் உள்ள விடயமாகும். ஏன் இராணுவம் தேர்தலில் தேலையில்லாமல் தலையிடவேண்டும்?

இராணுவம் முகாம்க-ளுக்குள்ளேயே அடங்கி இருத்தல் வேண்டும். மக்கள் மத்தியில் இதனை நான் பல தடவைகள் தெரிவித்துள்ளேன். இராணுவத்தின் அடக்குமுறைகள் இதிலிருந்து வெளிப்படுத்துகின்றது. இதனை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனைவியாலும் தாயாலும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட கணவர், மகள், மகன் ஆகியோர் தொடர்பாக இன்றுவரை அரசினால் ஒழுங்கான தகவல்கள் தரப்படவில்லை. இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவும் அரசங்கமும் இராணுவத்தினரிடம் யாருமே சரணடையவில்லை என்று கூறி வருகிறது. நாம் கைது செய்யப்பட்ட 12 ஆயிரத்துக்கும்மேற்பட்ட முன்னாள் போராளிகளை விடுதலை செய்தோம் என இவர்கள் கூறியது பொய்யா? என நான் இவர்களிடம் கேட்கவிரும்புகின்றேன்.

சரணடைந்தவர்கள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை என பொது மக்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர். பல்வேறு சந்தேகங்களுடன் நாங்களும் மக்களும் வாழ்ந்து வருகின்றோம். பலமுன்னாள் போராளிகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாம். சரணடைந்தவர்களைக் கொலை செய்வது மனித உரிமை மீறலாகும். இராணுவம் தாங்கள் யாரையுமே கொலை செய்யவில்லை என்று சொல்கின்றனர். இதனை எமது மக்கள் ஏற்கவில்லை என்றார்.

இப் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான ஐங்கரநேசன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com