தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மிகவும் சூழ்ச்சிகரமான வழிமுறையூடாக வெளியுலகிற்கு மறைக்கும் அரசாங்கத்தின் அடிவருடிகளுக்கு வைக்கும் வேட்டாகவே நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் கனகரட்ணம் விந்தன் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை காலை திருநெல்வேலி மத்தியில் பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி,பயில்நிலை ஆசிரிய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசுகையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய வேட்பாளர் விந்தன்,
இலங்கை அரசாங்கம் எமது தேவை அபிவிருத்தி மட்டும் தான் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்துடன் தமிழ்த் தேசியத்திற்கும் எமது மக்களின் விடுதலைக்கும் விரோதமான சக்திகளை ஒருங்கிணைத்து உங்களிடம் வாக்குக் கேட்டு வந்துள்ளது.
அவ்வாறாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட அபிவிருத்தி மட்டுமே மக்களின் தேவை என்ற விசமததனமானதும் பொய்யானதுமான கருத்திற்கான அங்கீகாரத்தினைப் பெற்று அதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பில் சர்வதேசத்தினதும் ஏனைய எம் மீது கரிசனை கொண்டுள்ள சக்திகளதும் பார்வையினைத் திசை திருப்பவே இவ்வாறான கோடி பணத்தினை செலவிட்டு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இந்த அரசாங்கத்தின் கபட முயற்சிகளுக்கு தமிழராய்ப் பிறந்து விலைபோன சிலரும் ஒத்துழைக்கின்றனர்.
உண்மையில் நாம் எமது இனத்தின் விடிவிற்காக இன்று எம்மிடம் இருக்கக் கூடிய ஓரே ஆயுதமான வாக்குரிமையினைப் பயன்படுத்துங்கள் எனக் கேட்கின்றோம்.
உங்களது வாக்குகளை யாரும் அரசாங்கக் கட்சியினரோ அல்லது சுயேட்சைகளோ எதாவது சலுகையினைத் தந்தார்கள் என்பதற்காகவோ முகத்துதிக்காகவோ அளித்துவிட வேண்டாம்.
அரசாங்கத்தின் அனுசரணையினைப் பெற்றவர்கள், நமது மக்களின் வரிப்பணத்தினை கொள்ளையடித்தே தேர்தல் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அவ்வாறானவர்கள் ஊழல்கள் வாயிலாக ஈட்டிக்கொண்ட லாபத்தினைப் பயன்படுத்தியே பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
உங்களுக்கு ஆங்காங்கே அவர்கள் வழங்கிய சலுகைகளையும் கடந்த காலத்தில் எம்மிடம் கொள்ளையிட்ட பணத்தினைக் கொண்டு மேலும் எதிர்காலத்திலும் கொள்ளையிடுவதற்காகவே வழங்கினர்.
அரசாங்கத்துடன் செயற்படுபவர்கள் எமது மக்களை நிர்வாணப்படுத்தி தெருவில் விடுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இவ்வாறாக அவர்கள் முயற்சிப்பது தமது தனிப்பட்ட சுகபோகங்களுக்காகவே ஆகும். இவர்களுக்கு நீங்கள் தக்கபாடம் கற்பிக்க வேண்டுமாயின் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறாக ஓர் தர்மத்தினை வெல்வதற்கான இறுதிப்பொழுதில் தான் நாம் உங்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களின் இலட்சியம் வெல்ல வாக்களிக்க வேண்டும் என நான் உங்களிடம் கேட்கின்றேன்.
தமிழரின் நியாயத்திற்காக களம் காணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நீங்கள் வாக்களிக்காது விடுவீர்களாயின், அது அதர்மத்திற்கு நீங்கள் துணைபோன காரியமாகவே அமையும். வாழ்நாள் பூராகவும் உங்களை வதைக்கும் விடயமாகவும் அது அமையும்.
எனவே இந்த இறுதி நேரத்தில் எமது உருக்கமான அழைப்பினைப் புரிந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழர்களும் வாக்களிக்கும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அமோக வாக்குகளால் வெற்றியடையவும் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
இது கூட்டத்தில் கலந்துகொண்ட உங்களுக்கான செய்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான நியாயமான எம் அழைப்பு. இதனை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு யாழ். மாவட்ட வேட்பாளர் கனகரட்ணம் விந்தன் தெரிவித்தார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment