Home » , » ஆளுனர், அதிகாரிகளின் அலட்சியத்தினால் வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3526 மில்லியன் ரூபா திறைசேரிக்குத் திரும்பியது

ஆளுனர், அதிகாரிகளின் அலட்சியத்தினால் வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3526 மில்லியன் ரூபா திறைசேரிக்குத் திரும்பியது

கடந்த 2012ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட 3526 மில்லியன் ரூபா நிதி, ஆளுனர் சந்திரசிறி மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், நிர்வாகத் திறனின்மையாலும், செலவிடப்படாமல் மீளவும், திறைசேரிக்குத் திரும்பிச் சென்றுள்ளது.

இந்த விபரம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, சிறிலங்காவின் உள்ளூராட்சி மாகாணசபைகள் பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, இதுதொடர்பான புள்ளிவிபரங்களை சமர்ப்பித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைக்கு கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், 10,153 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், 6627 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

செலவிடப்படாத எஞ்சிய 3526 மில்லியன் ரூபா நிதி மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் அவருக்குக் கீழ் செயற்பட்ட அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலும், வினைத்திறனற்ற செயற்பாடுகளாலுமே, இந்தளவு நிதி திரும்பிச் சென்றுள்ளது.

வடக்கு மாகாணசபையில் மட்டுமன்றி கிழக்கு உள்ளிட்ட ஏனைய எல்லா மாகாணசபைகளிலும், ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிர்வாகங்களும் ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடாமல் திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளன.

கிழக்கு மாகாணசபைக்கு 2012ம் ஆண்டில், 12,577 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், 8531 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், எஞ்சிய 4,046 மில்லியன் ரூபா திறைசேரிக்கு திரும்பிச் சென்றுள்ளது.

மேல் மாகாணசபைக்கு 11,173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், 6,957 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட 15,758 மில்லியன் ரூபாவில் 9,916 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது.
தென்மாகாணசபைக்கு 13,792 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், 9,248 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணசபைக்கு 14,613 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 9,237 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது. வட மத்திய மாகாணசபைக்கு 10,867 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், 6,848 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபைக்கு 11,102 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 7,279 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணசபைக்கு 12,866 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், 8,531 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2012ம் ஆண்டில் மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட 112,901 மில்லியன் ரூபா நிதியில், 73,077 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், எஞ்சிய நிதி திறைசேரிக்கு மீளத்திரும்பியுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com