Home » , » கூட்டமைப்புக்குள் போட்டி பிளவு ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை: மனம் திறக்கிறார் மாவை

கூட்டமைப்புக்குள் போட்டி பிளவு ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை: மனம் திறக்கிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்கள் தலைமையின் முடிவை நாங்கள் பூரணமாக வரவேற்பவர்கள். ஆற்றலும் ஆளுமையும் அனுபவமும் கொண்ட நீதியரசர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் நிற்போம்.


இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விடயமாக வீரகேசரிக்கு அளித்த விசேட பேட்டியின் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென மக்களும் ஆதரவாளர்களும் என்னை வற்புறுத்திய போதும் அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் மக்கள், கட்சி ஆகியன விரும்புமாக இருந்தால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என்பதை மாத்திரமே நான் கூறியிருந்தேன்.

யாரிடமும் என்னை முதலமைச்சர் வேட்பாளரக நியமியுங்கள் என நான் கேட்கவில்லை. இந்த நிலையில்தான் எமது கட்சியின் தலைவருக்கும் செயலாளருமாகிய எனக்குமிடையில் ஒரு பிளவு ஏற்பட்டு விடக்கூடாது. நாம் ஒன்று சேர்ந்து நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டும்.

சர்வதேசத்தில் நிலவுகின்ற இந்த நல்ல சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் அரசாங்கமானது பேசி தீர்வு காணப்பட வேண்டுமென சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் நான் ஒரு வேட்பாளனாக நின்று ஒரு போட்டியை பிளவை ஏற்படுத்த எனது மனம் இடங்கொடுக்கவில்லை.

அதன் காரணமாகவே நான் அந்தப் போட்டியினைத் தவிர்த்துக்கொண்டேன். இன்று கூட்டமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு சிறந்த நீதியரசர். மதிப்புப்பெற்றவர். அதன் காரணமாகவே அவரை நாம் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இதுகட்சியின் ஏகோபித்த முடிவு. நான் தலைமைக்கு கட்டுப்பட்டவன். எனக்கும் தலைமைக்கும் இடையில் எந்த வேறுபாடும் பிளவும் இல்லையென்பதையும் கூட்டமைப்பில் சிறந்த ஒற்றுமை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாகவே எனது முடிவு அமைந்திருந்தது.

சிறந்த நீதியரசரும் சட்ட வல்லுனருமாகிய நீதியரசர் முதலமைச்சர் ஆக வருவது எமது எதிர்கால அரசியலைத் தீர்மானிப்பதற்கும் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக உழைப்பவராக அவர் மாறுவதும் எமக்கும் எமது கட்சிக்கும் இன்னுமொரு பலத்தை சேர்க்குமென நம்புகின்றோம்.

நான் முதன்மை வேட்பாளராக இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்திருந்தால் அது பல இடங்களில் தவறான செய்திகளையும் குழப்பங்களையும் உருவாக்கியிருக்கும். பல விளைவுகளைக்கூட ஏற்படுத்தியிருக்கலாம். நான் தமிழ் மக்களின் விடுதலைக்காக வாழ்வுரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதில் தான் அதிக ஆர்வம்காட்டி வந்திருக்கின்றேன் எனது வாழ்நாள் முழுவதுமே போராட்ட வரலாறாகவே இருந்துள்ளது.

முதலமைச்சராக போய் அதற்குள் முடங்கிப் போக எனது மனம் இடம் தரவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைக்காக நில உரிமைக்காக போராட்டத்தை முன்னெடுக்கவே விரும்புகின்றேன். எனது சிந்தனையின் அடிப்படையிலும் மனச்சாட்சியின் அடிப்படையிலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப சிறந்த வல்லுனர்கள், சட்ட அறிஞர்கள், புத்திஜீவிகள், சர்வதேசத்தில் ஏற்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அவர்கள் வருவதற்கு இடமளிப்பது நன்று என நினைத்தேன். அவர்கள்வெற்றி பெற தமது கடமைகளை மேற்கொள்ள நானும் என்னைச் சேர்ந்தவர்களும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் மக்களும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். நான் இது பற்றி பல முறை பேசி வந்திருக்கின்றேன்.

எமது விடுதலைப் போராட்டத்தில் படித்தவர்களை, அறிஞர்களை ஆர்வம் கொண்ட மக்களை, பேரறிஞர்களை இந்த அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட முன் நிற்பவர்களை ஒன்றிணைத்து போராடுவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்க முடியுமென நான் நம்புகின்றேன். அதற்கு தலைமை தாங்கும் தளபதியாக பங்காளியாக, போராளியாக செயற்படவும் நான் ஆயத்தமாக இருக்கின்றேன்.

அதற்காகவே நான் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதில்லைஎன்ற தீர்மானத்தை எடுத்தேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நடக்கப் போகின்ற வடமாகாண சபைத்தேர்தலை சந்திப்பது என்றும் எதிர்காலத்தில் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் எமது வடகிழக்கைக் கட்டியெழுப்ப சீரழிந்து போய்க் கிடக்கும் நமது சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர இந்த மாகாண சபை முறைமை உதவுமாக இருந்தால் ஊழல் அற்ற மக்கள் கண்ணீரைத்துடைக்கின்ற மாகாண சபையாக இது கட்டி எழுப்பப்பட வேண்டுமென்பதற்காகவே முதலமைச்சர் வேட்பாளரை நாம் தெரிவு செய்துள்ளோம்.

நீதியரசர் விக்கினேஸ்வரனால் அமைக்கப்பட்டிருக்கின்ற மாகாண சபை, இவ்விடயங்களை முன்னெடுத்துச் செல்வது மாத்திரமல்ல, நாம் இதுவரை காலமும் கடந்து வந்திருக்கின்ற பாதையை தொடர்ந்து கொண்டு செல்ல மக்களை அணி திரட்ட, சுதந்திரமாக செயற்பட, இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்திருக்கின்றது என்ற காரணத்தினால்தான் இத் தேர்தலை எதிர்நோக்குகின்ற உறுதிப்பாட்டை எடுத்துள்ளோம்.

இந்த தேர்தலானது தமிழ் மக்கள் மட்டுமல்ல, சர்வதேசம் ராஜ தந்திர வட்டாரங்கள், புலம்பெயர் சமூகம் உட்பட முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு தேர்தலாகும். இந்த தேர்தலால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமென்று எதிர்வு கூறுவது கஷ்டமான காரியமே. காரணம் 13 ஆவது திருத்தச்சட்டம் அதன் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பின்னரும் இன்று நடைமுறையில் இருக்கின்ற வலுவான இறுக்கமான ஒற்றையாட்சி அமைப்புக்குள் அரசாங்கத்தால் பறிக்கப்பட்ட அதிகாரங்கள் திரும்பி வழங்கப்படுமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசைப் பொறுத்தவரை காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்குத் தர முடியாது என திடசங்கற்பத்துடன் கூறி வருகின்றார்கள்.

இந்த தேர்தலானது சர்வதேச ரீதியாக குறிப்பாக இந்தியாவினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே நடத்தப்படுகிறது. அதை விட இவ்வருடம் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு முன் இத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என அரசு நினைப்பதாக தெரிய வருகிறது.

எங்களைப் பொறுத்தவரை 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைந்து விட முடியாது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை இந்த 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக பிரதிபலிக்கவில்லை. இது விடயமாக எமது தலைவர் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இரா. சம்பந்தன் ஆகியோர் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரிவித்திருந்தார்கள்.

ஆனாலும் இந்த திருத்த சட்டத்தில் ஒரு சில நன்மைகளும் இருந்துள்ளன. வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு, மற்றது சமஷ்டி முறையிலான தீர்வுக்கு ஒரு திறவு கோலாக இது இருக்கின்றது என்று கூறப்பட்டது. எதுவாக இருந்தாலும் இன்று இருக்கின்ற வலுவான அரசியல் அமைப்புச்சட்டத்தின் கீழ் ஏற்று ஆட்சியின் கீழ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு இடமளிக்காது என்பது எங்களது கருத்தாக இருந்தது.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கு திவிநெகும சட்ட மூலம் தக்க உதாரணமாகும். இந்த அனுபவங்களைக் கொண்டுதான் சொல்கின்றோம் திட்டவட்டமாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லையென்று. கடந்த வருடம் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி நாம் குறிப்பிடவில்லை. அதற்கு அப்பால் சென்று ஒரு சமஷ்டி முறையிலான மாகாண சபைகளுக்கு பரிபூரண அதிகாரங்கள் வழங்கக் கூடிய தீர்வுத் திட்டத்தையே நாம் முன்வைத்திருந்தோம். அதற்கு அரசாங்கம் எந்தப் பதிலையும் கூறவில்லை.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com