Home » , , , » இராணுவத்தினர் அச்சுறுத்தியதாக எவருமே முறையிடவில்லை!- தேர்தல் ஆணையாளர் - முறையிட்டும் நடவடிக்கை இல்லை!- தமிழ் கூட்டமைப்பு

இராணுவத்தினர் அச்சுறுத்தியதாக எவருமே முறையிடவில்லை!- தேர்தல் ஆணையாளர் - முறையிட்டும் நடவடிக்கை இல்லை!- தமிழ் கூட்டமைப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் சிலர் இராணுவத்தினரால் அச்சுறுத்துப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து பிபிசியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
எழுத்துபூர்வமான முறைப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் தம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

வடமாகாண சபைக்கான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நேரடியாகப் பார்வையிடவும். கண்காணிப்பதற்குமாக அவர் சென்றுள்ளார்.
இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதாகக் கூறப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவ்வாறு எழுத்து மூலமான முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் தங்களை அச்சுறுத்தியதாக எவருமே முறையிடவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
வடக்கிலே வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்று பொதுவாகத் தெரிவிப்பது போதாது, எழுத்து மூலமாக முறையிட்டால்தான் அது பற்றிய விசாரணைகளை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் தலையிடுகின்றனர் என்று கூறப்பட்டாலும், அத்தகைய தேவை அவர்களுக்குக் கிடையாது எனவும் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார்.

தன்னுடைய அழைப்பின் பேரிலோ அல்லது பொலிசார் அழைத்தால் மட்டுமே இராணுவம் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் என்றும், அவ்வாறில்லாமல் படையினர் தேர்தல் விடயங்களில் தலையீடு செய்திருந்தால், அது தொடர்பில் சரியான முறையில் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அப்போதுதான் அதுபற்றிய விசாரணைகளை ஆணையம் நடத்த முடியும் என்றார் இலங்கையின் தேர்தல் ஆணையாளர்.

முறைப்பாடு செய்தோம்: சுரேஷ் எம்பி.

தேர்தல் ஆணையாளரின் இந்தக் கூற்று குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையில், இதுபற்றி ஆராய்வதற்காக, கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கூட்டப்பட்ட கூட்டங்களில் தாங்கள் தெளிவாக அவருக்கு எடுத்துக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட அன்று எமது வேட்பாளர் ஒருவர் சாவகச்சேரியில் அச்சுறுத்தப்பட்டது தொடர்பில் அவர் தேர்தல் திணைக்களத்திற்கு முறையிட்டிருந்தார்.
ஆனால் திணைக்களம் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
சம்பவங்கள் குறித்து நேரடியாக அவருக்கு எடுத்துக் கூறிய பின்பும் எழுத்து மூலமாக முறைப்பாடு தேவை என்று அவர் கூறுவது கவலைக்குரிய விஷயம் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com