கடமை நேரங்களில் அரச ஊழியர்கள், அதிகாரிகள் அலுவலகங்களை விட்டு வெளியில் சென்று எந்த வகையிலான மக்கள் சந்திப்புக்களிலும் பங்கு கொள்வதும், தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இனங்காணப்பட்டால் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த வடமாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் சிவன்சுதன் அச்சுதன், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்ற அரச உதவிகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் எவராலும் நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் ஏற்கனவே திணைக்களத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடமை நேரங்களில் அரச ஊழியர்களோ, அதிகாரிகளோ அலுவலகங்களைவிட்டு வெளியில் செல்லக்கூடாது. அவர்கள் வெளியில் சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடுவதோ அல்லது தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ இனங்காணப்பட்டால் அவர்கள் மீது உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அரச அதிகாரிகள் எந்த வொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடி பணிந்து கடமையாற்ற வேண்டியதில்லை.
அரச கொள்கைப் பிரமாணங்களின் படி அரச அதிகாரிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேலையிலிருந்து நிறுத்தப்பட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் மக்களுக்கு அரசின் கொள்கைக்கு அமைவாக வழங்கப்பட்டு வருகின்ற வரப்பிரசாதங்கள், சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த வரப்பிரசாதங்கள் நிறுத்தப்படும் என்று விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலுக்கு மக்கள் இணங்கிச் செயற்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் மக்கள் அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அடி பணிய வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment