Home » » ஒவ்வொரு மனிதனும் சுய மரியாதையையும் கௌரவத்தையும் உயிரிலும் மேலாக மதிக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் சுய மரியாதையையும் கௌரவத்தையும் உயிரிலும் மேலாக மதிக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தற்போது சிங்கள பேரினவாதிகள் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் பீதியையும் கிளப்பி விட்டிருக்கிறார்கள் . தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படியொரு பின்னணி உருவாகியிருப்பது கவனிக்க வேண்டிய விடயமாகும் .

 அது மாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க விட மாட்டோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் தெரிவித்திருப்பது இந்நாட்டில் தமிழர்களின் இருப்பினையே கேள்விக்குறியாக்கியுள்ளது . ஏனெனில் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியை கூட ஆட்சி செய்ய விட மாட்டோம் என்று கூறுவது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரம் விடுக்கப்பட்ட சவால் அல்ல .

 மாறாக இது அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் விடுக்கப்பட்ட சவாலாகும் . இதே போன்றதொரு கருத்தை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் முடிந்த பிற்பாடு கூறியிருந்தார் . அவர் தெரிவித்த கருத்தானது வடக்கு மக்கள் இனிமேல் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்தே பணத்தை பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளட்டும் என்பதாக அமைந்திருந்தது .

 இவர்களின் கருத்துக்கள் அரசியலில் அவர்களது முதிர்ச்சி அற்ற நிலைமையையும் மற்றும் அவர்களது பெரும்பான்மையினர் என்கிற மமதையையுமே காட்டுகின்றன . இந்த கருத்துக்கள் ஒரு விடயத்தை மாத்திரம் தெளிவுபடுத்துகின்றன . அதாவது எங்கே சிறுபான்மை மக்கள் செறிந்து காணப்படுகின்றார்களோ அந்த இடங்களில் கூட அவர்கள் நினைத்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற போது அரசாங்கமானது கட்டாயமாக வழங்க வேண்டிய வளங்களை கூட தடை செய்து விடுகிறது . இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் சாசனத்திற்கு முரணாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளதாக கங்கணம் கட்டிக்கொண்டு நிற்போர் , நியாயமாக தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ உரிமைகள் மறுக்கப்பட்டபோது எங்கே இருந்தனர் . 

 எனவே இவர்களது இத்தகைய செயற்பாடானது அரசியல் அமைப்பை குறித்து இவர்களுக்கு இருக்கின்ற அக்கறையை வெளிக்காட்டவில்லை மாறாக சிறுபான்மையின மக்களுக்கு எந்தவொரு அதிகாரப் பகிர்வும் வழங்கப்படக்கூடாது என்பதோடு சிறுபான்மையின மக்கள் எப்பொழுதும் பெரும்பான்மையின மக்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதையே வெளிக்காட்டுகின்றது . 

 அது மாத்திரமன்றி பேரினவாதிகளின் கைபொம்மைகளாக இருக்கும் அளவுக்கும் அந்த கைபொம்மைகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் மக்களை பணயம் வைத்து வழங்கப்படுகிறது . இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை அரசியலில் தமிழர்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் பேரம் பேசும் சக்தியும் மறைந்து போய்விடும் . ஆகையினாலேதான் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் இந்த வட மாகாண சபை தேர்தல் மிக முக்கியமானதொன்றாகும் . இந்த தேர்தல் முடிவின் அடிப்படையில்தான் எமது அரசியல் தீர்வின் அடுத்த கட்டம் நிர்ணயிக்கப்பட போகின்றது .

 பாரம்பரியமாக நாம் வாழ்ந்து வந்த பூமியையும் எமது வளங்களையும் ஒரு சில அடிவருடிகளின் தனிப்பட்ட நன்மைக்காக சுயநலனுக்காக நாம் விட்டுக்கொடுக்க முடியாது . மறு பக்கம் நியாயமான சட்டத்தை தவிர வேறு எவருக்கும் நாம் அடிபணிந்தோ அடிமைகளாகவோ வாழவும் முடியாது . இந்த தசாப்தம் எமது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான ஒரு காலமாகும் . ஏனெனில் நாம் முழு சர்வதேச சமூகத்தையும் எம்மை திரும்பி பார்க்க வைத்திருக்கிறோம் . 

ஆனால் , அத்தோடு எமது பணி முடிந்து விட்டது என்று எம்மால் நிம்மதியாக வாழ முடியாது . நாம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது அரசியல் தீர்வை மட்டுமல்லாது எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் . நாம் அப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் எமது பிரதிநிதிகளை அரசியல் களத்தில் நாம் வைத்திருப்பது இன்றியமையாததொன்றகும் . சலுகைகளுக்கு அடிபணிகின்ற அரசியல் தலைமைகள் எமக்கு வேண்டாம் . மாறாக நாம் இழந்தவற்றை எமது எதிர்கால சந்ததி இழக்காதவாறு பாதுகாக்கும் ஒரு தலைமைத்துவமும் பிரதிநிதிகளுமே தேவை . இன்று நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை புறக்கணித்து வாக்களிக்கின்ற பட்சத்தில் , நாம் சிங்கள பேரினவாதிகளின் அடிமைகளாகவே வாழ வேண்டி ஏற்படும் என்பது நிச்சயம் . 

 ஏனெனில் தற்போது கூட வடக்கின் சிவில் நிர்வாகம் முழுவதுமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றது . எனவே நாம் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் நாளைய எமது இருப்பை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . இந்த அரசாங்கத்திற்கு இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்கிற தேவை இல்லை என்பது மாத்திரம் வெளிப்படையான உண்மை . அவ்வாறானதொரு தேவை இருந்திருந்தால் கிழக்கு மாகாண சபை தேர்தல்கள் முடிந்த பிறகு முஸ்லிம் , தமிழ் இரண்டு சிறுபான்மை கட்சிகளையும் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க விட்டிருக்கலாம் . ஆனால் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் அது தமக்கு சவாலாக அமையும் என்பதை உணர்ந்து இந்த அரசாங்கம் அதை தடை செய்தது . 

இராணுவத்தை கொண்டு மக்களை பயமுறுத்தி அவர்களை வாக்களிக்க செல்ல விடாமல் தடை செய்வதன் மூலம் , அதைப் போன்றதொரு வேலையையே வடக்கு தேர்தலிலும் செய்ய முற்படுகிறது . உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் ஆர்வமாக இருக்குமே என்றால் அது நீதியான ஒரு தேர்தலை வடக்கிலே நடத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இயங்குகின்ற ஒரு அரசாங்கத்தோடு இணைந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதின் மூலமும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதின் மூலமாகவும் அரசியல் தீர்வை நோக்கி நல்லதொரு அடித்தளத்தை போடலாம் . ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளானது இதற்கு நேர் எதிரானதாகவே காணப்படுகின்றது . 

 ஆகையினால் தமிழ் பேசும் மக்களாகிய நாம் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நாளைய எமது இருப்பை உறுதி செய்வது கட்டாயமாகும் . நாம் அவ்வாறு செய்ய தவறுகின்ற பட்சத்தில் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய வரலாற்று தவறு இதுவாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை . ஏனெனில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையானது ஏதாவது ஒரு வழியில் இந்த தேர்தலை வென்று இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை எல்லா மக்களும் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்ட முற்படுகின்றது . 

அப்படி காட்டுவதன் மூலம் சர்வதேச பிடியில் இருந்து தப்பிவிட முயற்சிக்கின்றது . அப்படியாக அரசாங்கமானது வெற்றி பெறுகின்ற போது அது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவது மாத்திரமல்ல எமது வருங்கால சந்ததியினரையும் குழி தோண்டி புதைத்துவிடும் . ஆனால் , வடக்கு தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையோடு கைப்பற்றுகின்ற போது அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கமானது பாரிய நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது . 

 எப்படியாக சர்வதேச அழுத்தம் காரணமாக வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துகிறதோ அதைப் போலவே சர்வதேச நியமங்களுக்கமைய சிறுபான்மையினரின் அரசியல் தீர்வையும் வழங்க வேண்டிய ஒரு கட்டாய சூழலுக்குள் தள்ளப்படும் . ஆகவே , வடக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை இத்தேர்தலில் அதிக பெரும்பான்மையோடு வெற்றி பெற செய்து அரசியல் தீர்வை நோக்கிய எமது நீண்ட பயணத்தில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எல்லா தமிழர்களின் அவாவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . 

 இது எல்லா தமிழர்களுக்கும் ஒரு இறுதி சந்தர்ப்பம் . ஏனெனில் நாம் சலுகைகளுக்கு அடிபணிந்து வாக்களிக்கும் போது எமது முழு எதிர்காலமும் நாம் தலை வணங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படும் . மாறாக நாம் எமது உரிமையையும் கௌரவத்தையும் முன் வைத்து வாக்களிக்கின்ற போது அதே சலுகைகளை முழு உரிமையோடு பெரும்பான்மையின மக்களுக்கு சமமாக இருந்து அவற்றை நாம் அனுபவிக்க முடியும் . ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தோடு சேர்ந்து இருந்தால் எமது உரிமைகளை வென்று எடுக்கலாம் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகள் தங்களது வங்கி கணக்குகளையும் சொத்துக்களையும் உயர்த்தி கொண்டார்களே தவிர மக்களது வாழ்க்கை தரங்களை உயர்த்த முடியவில்லை . 

 ஆகவே , நாம் தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ்வதா அல்லது எமது சிங்கள மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அதே அளவு சுதந்திரத்தோடு அனுபவித்து வாழ்வதா என்பதை தீர்மானிக்கும் ஒரு இறுதி தருணமாக இது அமையப்போகின்றது . ஆகையினால் பெரியாரின் " ஒவ்வொரு மனிதனும் சுய மரியாதையையும் கௌரவத்தையும் உயிரிலும் மேலாக மதிக்க வேண்டும் " என்ற கருத்து இன்றைய தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது ஆகையினால் நாம் அளிக்கப்போகும் ஒவ்வொரு வாக்கும் எமது சுய மரியாதையையும் கௌரவத்தையும் மாத்திரமல்ல எமது எதிர்கால சந்ததியினரின் இருப்பையும் தீர்மனிக்க போகின்றதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com