வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெல்லக்கூடாது என்ற நோக்குடன் அரசாங்க ஆதரவுடன் இத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்காக இராணுவத்தினர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அப்பட்டமான தேர்தல் சட்டமீறலாகும். எனவே இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றிபெறவேண்டியதன் தேவையை உணர்ந்து சகல தமிழ் மக்களும் கூட்டமைப்பினரின் வெற்றிக்காக உழைத்து அவர்களுக்கு வாக்களிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுழிபுரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய அரசியலில் எனது தேவையை உணர்ந்து கொண்டு சட்டத்தரணிகள் சங்கத்தின் மூத்த சட்டத்தரணிகளும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே நான் இந்தத் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருந்தேன்.
வடக்கு மாகாண சபையிக்கு 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் 30 உறுப்பினர்களையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் தமிழ் மக்கள் அமையவுள்ள வடமாகாண சபைக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாம் வடக்கின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் மட்டுமே எமது பிரதேசத்தை முழுமையாக அபிவிருத்தி செய்து மக்களின் நீண்ட கால உரிமைப் பிரச்சினை சர்வதேசத்தின் ஆதரவுடன் தீர்த்து வைக்கமுடியும்.
இத் தேர்தலில் எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பெரும்பான்மைப் பலத்தினைக் குறைக்கவேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சி வேட்பாளர்கள் சார்பில் இராணுவத்தினர் தமிழ் மக்களிடம் வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த வேட்பாளர்களுடன் தமிழ் மக்களின் வீடுகளுக்குச் செல்கின்ற இராணுவத்தினர் மக்களுக்கு மாடுகள், கோழிகள், ஆடுகள் தருவதாக வாக்குறுதி அளித்து பணத்தைத் தருவதாக பத்திரத்தைக் கொடுத்து அவர்களிடம் ஒப்பங்களைப் பெற்று வருகின்றனர். இது அப்பட்டமான தேர்தல் சட்ட மீறலாகும்.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து இத்தேர்தலில் கூட்டமைப்பினை வெற்றிபெறச் செய்கின்ற சந்தர்ப்பத்தில் வடக்கிலிருந்து முற்றாக இராணுவத்தை அகற்றி இப்பகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டி இயல்பு நிலையினை ஏற்படுத்த முடியும்.
எனவே இத் தேர்தலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சகல தமிழ் மக்களும் ஒன்றிணைந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வடக்கில் கூட்டமைப்பினர் ஆட்சி அமைப்பதற்கான ஆணையை வழங்கவேண்டும் என்றார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment